தன்னையும், தனது கட்சியினர்களையும் ஒருமையில் மரியாதை இல்லாமல் பேசிய போலீஸ் அதிகாரியை கண்டித்து விருதுநகர் – அருப்புக்கோட்டை சாலையில் இன்று மதியம் வைகோ திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சாலை மறியலில் ஈடுபட்டார். பாரதிய ஜனதா கூட்டணியில் இருக்கும் வைகோ விருதுநகர் தொகுதியில் போட்டியிடுகிறார். அதற்காக அவர் கடந்த ஒரு வாரமாக தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் இன்று அருப்புக்கோட்டையில் பிரசாரம் செய்வதற்காக வைகோ விருதுநகரிலிருந்து தனது காரில் கிளம்பினார். அவரை மதிமுக கட்சி நிர்வாகிகள் கார்களில் பின் தொடர்ந்தனர்.
அருப்புக்கோட்டை சாலையில் பெரியவள்ளிகுளம் அருகே காமராஜர் மணிமண்டபம் என்ற இடத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் வைகோ சென்ற காரை நிறுத்தி சோதனை செய்ய வேண்டும் என்று கூறினர். இதற்கு வைகோ ஒத்துழைப்பு கொடுப்பதாகவும் கூறினார்.
வைகோவின் காரை சோதனையிட்ட பின்னர் பின்னாள் வந்த கார்களையும் போலீஸார் சோதனை செய்தனர். அப்போது மதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். தாங்கள் வைகோ கட்சியினர் என்று கூறியதாக தெரிகிறது. அவர்களிடம், போலீஸ் அதிகாரி ”நீ யாராக இருந்தால் என்ன?, என்று கூறியதால் மதிமுகவினர்களுக்கும் போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும், ம.தி.மு.க.வினரை எஸ்.ஐ. ராமகிருஷ்ணன் ஒருமையில் பேசியதாகக் கூறப்படுகிறது.
இதை பார்த்துக்கொண்டிருந்த வைகோ ஆத்திரமடைந்து போலீஸ் அதிகாரிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுப்டடார். அவருடன் வந்த மாவட்டச் செயலாளர் ஆர்.எம்.சண்முகசுந்தரம், முன்னாள் எம்.எல்.ஏ. வரதராஜன் மற்றும் ம.தி.மு.க. தொண்டர்களும் மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து வைகோ, செய்தியாளர்களிடம் கூறியபோது”வாகன சோதனை நடத்தவேண்டுமென்றால் நடத்திக்கொள்ள வேண்டியதுதானே. அதைவிட்டுவிட்டு, வாகனத்தை நிறுத்தி இறங்குங்கடா, யாருடா நீங்க? என்றெல்லாம் ஒருமையில் பேசியது சரியல்ல. என் வாழ்க்கையில் இதுபோன்ற மோசமான வார்த்தைகளைப் பேசிய காவல்துறை அதிகாரிகளை இதுவரை நான் பார்த்ததில்லை.
பிரச்னை செய்யவேண்டும் என்பதற்காக நான் சாலையில் உட்காரவில்லை. இது மக்களுக்குத் தெரியவேண்டும் என்பதற்காகத்தான் உட்காந்திருக்கிறேன்” என்றார். மேலும், போலீசாரைப் பார்த்து, ”முதல்வர் செல்லும்போது 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. அப்போது தேர்தல் அதிகாரிகளெல்லாம் எங்கே போனார்கள்?” என ஆவேசமாக கேள்வியை எழுப்பினார். இதன் பின்னர் சிறிது நேரத்தில் தனது சாலை மறியலை கைவிட்டுவிட்டு பிரச்சாரத்தை தொடங்கினார்.
வைகோவின் மறியலால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதுடன், விருதுநகர் – அருப்புக்கோட்டை சாலையில் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

















