ஜெயக்குமாரி அக்காவுக்கு குருபரன் எழுதிய கடிதத்தில் குழந்தை சண்முகலிங்கம் அவர்கள் 80களில் மண்சுமந்த மேனியருக்கு எழுதிய வசனத்தை நினைவுபடுத்தியிருந்தார். ‘கிழக்கு வெளுக்கும் என்று வடக்கைப் பார்த்துப் பு..கைச் சொறிஞ்சுகொண்டு இருக்கினம்’. காலம் காலமாக இந்தியாவை தமிழ் மக்களும் தமிழ்த் தலைமைகளும் நம்பியது குறித்து அன்று அந்த ஆழமான கருத்தை; தனது அரங்காற்றுகையில் அவர வெளிப்படுத்தினார். மண்சுமந்த மேனியர் பாகம் 3 இப்போ வெளிவந்தால் ‘ கிழக்கு வெளுக்குது என்று மேற்க பார்த்து பு..கைச் சொறிஞ்சு கொண்டு இருக்கினம் எண்டும் எழுதியிருப்பார்.
சொந்த மக்களின் பலத்தில் மக்கள் மயப்பட்ட போராட்டங்களை அரசியல்மயப்படுத்தியும், அறிவியல் சார்ந்த நடைமுறையூடாகவும் வடிவமைக்காத வரை ஈழத்தமிழர் வாழ்வின் அடிமைத்தனம் இன்னும் ஒரு நூற்றாண்டுக்கு தொடரத்தான் போகிறது…
அண்மையில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அரசாங்கத்திற்கு எதிராக ஐநாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் பூரித்து நின்ற உலகத் தமிழருக்கு மகிந்த அரசாங்கம் வைத்திருக்கும் ராஜதந்திர ரீதியான மிகப்பெரிய ஆப்பில் இருந்து புலம்பெயர் தமிழர்களும் அவர்களுடைய வாழ்வுடன் பின்னிப் பிணைந்த தாயக உறவுகளும் மீள முடியுமா? முள்ளிவாய்க்காலில் மூழ்கி தவழ்ந்து தவழ்ந்து எழுந்து நிற்க முற்பட்ட வேளை மீண்டும் ஒரு பலமான தாக்குதலை மிகவும் நுட்பமாக நடாத்தியிருக்கிறது இலங்கை அரசாங்கம்.
இந்தத் தடையால் புலம்பெயர் அமைப்புகளுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என அந்த அமைப்புக்கள் மார்தட்டிக்கொள்ளலாம். மீசையில் மண் பிடிக்கவில்லை எனக் கூறலாம்… ஆனால் இலங்கை அரசால் திட்டமிட்டு அடிக்கப்பட்ட இந்த ஆப்பை எப்படி புலம்பெயர் மற்றும் தாயக அமைப்புக்கள், தமிழ் மக்கள் எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பதிலேயே ஈழத் தமிழ் மக்களின் எதிர்காலம் குறித்த பல விடயங்கள் தங்கி உள்ளன.
உலக அளவில் பரந்திருக்கும் 16 புலம்பெயர் அமைப்புக்களை பெயரிட்டு, அந்த அமைப்புக்களுடனோ அல்லது அவற்றின் தலமைத்துவங்களுடனோ, உறுப்பினர்களுடனோ தொடர்பு வைத்திருப்பது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தவறானதாகும் என இலங்கை அரசு உத்தியோகபூர்வமாக அறிவிக்க உள்ளது.
குறிப்பாக ஐ.நா பாதுகாப்பு சபைக்கு அமெரிக்காவினால் 28.9.2001ல் கொண்டுவரப்பட்ட பிரேரணை எண் 1373 மூலமாக இந்த நகர்வு மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
இரட்டை கோபுரங்கள் மீதான தாக்குதலை அடுத்து ஐ.நா பாதுகாப்பு சபையில் அமெரிக்கா சமர்ப்பித்த இந்தப் பிரேரணை, வெளிநாடுகளில் இருந்து இயங்கும் தீவிரவாத அமைப்புக்களையும் அவற்றிற்கு துணைபுரியும் அமைப்புக்களையும் தடை செய்யும் அதிகாரம் கொண்டது.
இதன்மூலமாகவே விடுதலைப்புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டதுடன் அதன் துணை அமைப்புக்கள் சிலவும் தடைசெய்யப்பட்டன. அது மட்டும் அல்லாது அவ் அமைப்புக்களின் பல மில்லியன் பெறுமதியான அசையும் அசையாச் சொத்துக்களும் முடக்கப்பட்டன.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க பண்டாரநாயக்கா தலைமையிலான அரசாங்கத்தில் வெளிநாட்டு அமைச்சராக இருந்த லக்ஸமன் கதிர்காமர் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட அந்த பிரேரனையை சாதகமாகப் பயன்படுத்தி விடுதலைப் புலிகளை உலக அளவில் பிரதான நாடுகளில் தடைசெய்ய முழுமூச்சாக செயற்பட்டார்.
அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட இந்தப் பிரேரணையின் மூலமாகவே அமெரிக்காவினால் தனக்கெதிராகக் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கும் பழிவாங்கும் துரும்பாக இலங்கை மீண்டும் கையில் எடுத்து உள்ளது. இதன் மூலம் இப்போ எஞ்சியிருக்கும் புலம்பெயர் அமைப்புக்களையும் முடக்கத் துணிந்திருக்கின்றது. இந்த நடவடிக்கையின் மூலம் இலங்கை அரசாங்கம் தனக்கெதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு மிகப் பெரும் அதிர்வாக இதனை மேற்கொள்ள முற்படுகிறது.
ஐ.நா பாதுகாப்பு சபைக்கு அமெரிக்காவினால் 28.9.2001ல் கொண்டுவரப்பட்ட பிரேரணை எண் 1373 மூலமாக இவ்வாறான தடை ஒன்றைக் கொண்டு வருவதற்கு, இலங்கை அரசாங்கம் பாராளுமன்றத்தில் கூட விவாதத்தையை அனுமதியையோ பெறத் தேவையில்லை. வெளிநாட்டு அமைச்சர் ஜீ.எர்.பீரிஸ் தனது அமைச்சின் ஊடான வர்த்தமாணி அறிவிப்பின் ஊடாக தடையை நடைமுறைப்படுத்த முடியும்.
இந்த வர்த்தமானி அறிவிப்பின் ஊடான தடை அமூலுக்கு வந்தால், இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக பிரேரணயைக் கொண்டு வருவதற்கு எந்த நாடுகள் அனுசரணை வழங்கியிருந்தனவோ அந்த நாடுகள் சிக்கலான சூழலுக்குள் அகப்படுவது தவிர்க்க முடியாது.
காரணம் ஐநா மனித உரிமைகள் அமைப்பின் ஊடான சர்வதேச விசாரணையை இலங்கை தனது எல்லைக்குள் அனுமதிக்காத வரை இலங்கையின் ஆட்புல எல்லைகளுக்கு அப்பால் உலக நாடு ஒன்றிலோ அல்லது பலவற்றிலோதான் விசாரணைப் பொறிமுறையை ஆரம்பிக்க வேண்டும்.
அவ்வாறாயின் அந்த விசாரணைப் பொறிமுறைக்கான பிரதான சாட்சியங்களை இனம் கண்டு, ஒருங்கமைத்து வழங்கும் ஆற்றல் புலம்பெயர் அமைப்புகளுக்கே உண்டு. எனினும் இலங்கை அரசாங்கத்தால் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் அமைப்புக்களாக இனம்காணப்பட்டு தடை செய்யப்பட்ட அமைப்புக்களுடன் ஐநாவின் எண் 1373 பிரேரணையை ஏற்றுக் கொண்ட நாடுகள் எப்படி உறவுகளைப் பேண முடியும்? இதற்கு மிக முக்கிய உதாரணமாக எனக்கு நிநனவில் வருவது, 2002ல் ஆரம்பிக்கப்பட்ட விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளின் போது புலிகளின் தடை தற்காலிகமாக இலங்கை அரசாங்கத்தால் நீக்கப்பட்டு இருந்தது. எனினும் இந்தக் காலப் பகுதியில், இணைத் தலைமை நாடுகளால் அமெரிக்காவில் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கைக்கு நிதி வழங்கும் நாடுகளின் கூட்டத்தில், இலங்கை அரசாங்கத்துடன் சம பலத்தில் பேச்சுவாத்தையில் ஈடுபட்ட விடுதலைப் புலிகளையும் அழைக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. எனினும் அமெரிக்க அதனை பலமாக நிராகரித்தது. தனது தடைப் பட்டியலில் உள்ள அமைப்பொன்றை உத்தியோகபூர்வ பேச்சில் கலந்துகொள்ள அமெரிக்காவுக்கு அழைக்க முடியாதென்ற முடிவில் அந்நாட்டு அரசாங்கம் இறுக்கமாக இருந்தது.
இவை யாவற்றையும் தாண்டி அவ்வாறு உறவுகளை பேணினாலும் தடைசெய்யப்பட்ட அமைப்புக்கள் அல்லது அவர்களின் ஆதரவாளர்கள், உறுப்பினர்கள் வழங்கும் சாட்சியங்களை அடிப்படையாகக் கொண்டு ஒரு இறைமையும் தன்னாதிக்கமும் கொண்ட நாட்டின் மீது எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்? என்ற கேள்விகள் இலங்கைக்கு ஆதரவான நாடுகளால் முன்வைகமுடியும். அதனை அமெரிக்க பிரித்தானிய தலைமையிலான நாடுகள் எவ்வாறு எதிர்கொள்வது?
இவற்றையும் மேவி இலங்கை அரசாங்கத்தால் பட்டியலிடப்பட்ட இந்த அமைப்புக்களின் தடையை அமெரிக்கா தலைமையிலான நாடுகள் பகிரங்கமாக நிராகரிக்கவோ அல்லது கண்டிக்கவோ துணிவார்களா?
அதற்கு அப்பாலும் இலங்கைக்கு எதிரான பிரேரணையை முன்னின்று வலியுறுத்தி பரவலாக வேலை செய்த சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகளுக்கான கண்காணிப்பகம் உள்ளிட்ட சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் இந்த தடையை பகிரங்கமாக கண்டிப்பார்களா? என்ற கேள்விகள் தொடராக எழுகின்றன…
இது இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட ஜெனீவாத் தீரமானத்திற்கு இலங்கை வைத்த முதலாவது பொறி.
இரண்டாவது பொறி…
இலங்கை அரசாங்கத்தால் பட்டியலிடப்பட்ட அமைப்புக்கள் பலவே இலங்கைக்கு எதிரான போர்க் குற்ற விசாரணைக்கான தகவல்கள், ஆவணங்கள், சாட்சிகள், ஒலி, ஒளிப் பேளைகள் உள்ளிட்ட ஆதாரங்களை சர்வதேச அளவில் மனித உரிமைகள் அமைப்புக்கள், ஊடகங்களுக்கு வழங்கி இருந்தன. எனினும் இனிவரும் நாட்களில் வர்த்தமானி வெளியிட்டின் பின் இந்த அமைப்புக்களுடனோ அல்லது அவற்றின் உறுப்பினர்களுடனோ தொடர்பு வைத்ரிருப்பவர்கள் மீது தேசத் துரோகக் குற்றச்சாட்டு சுமத்தப்படும். ஆயின் சர்வதேச விசாரணை என்று ஒன்று வரும் போது ஈழத்தில் இருப்பவர்களுடன் இந்த அமைப்புக்கள் எப்படி உறவைப் பேணமுடியும்? போர்காலத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை, அதற்கான ஆதராங்களை எவ்வாறு பெறமுடியும்? யார் அதற்கு துணிவார்கள்?
மூன்றாவது பொறி…
இலங்கை அரசாங்கத்தால் பெரிடப்பட்டு தடைசெய்யப்படும் அமைப்புக்களின் பட்டியல் வர்த்தமானியில் வெளிவந்த பின், இலங்கையின் களச் சூழலில் தற்போது முன்னிலைப்படுத்தப்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய பிரதான கட்சிகளுடன் தமிழ் மக்களின் பிரச்சனைகள் குறித்து விவாதிக்கவோ, கருத்தறியவோ, தமது எண்ணங்கள் கோரிக்கைகளை தெரியப்படுத்தவோ முடியுமா? இலங்கையின் 6ஆவது திருத்தச் சட்டத்தை ஏற்று பாராளுமன்றிலும், உள்ளுராட்சி மாகாண சபைகளிலும் சத்தியப் பிரமானத்தை மேற்கொண்ட பிரதிநிதிகள் தடைக்குப் பின் புலம்பெயர் அமைப்புக்களுடன் தொடர்பை பேண முடியுமா? புலம்பெயர் நாடுகளில் இடம்பெறும் கூட்டங்கள், கருத்தரங்குகள், ஒன்றுகூடல்கள், போராட்டங்களில் ஈழத்தில் தொழிற்படும் அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள முடியுமா? அதற்கு எவரும் இனித் துணிவார்களா? தேர்தல்கள் வரும்போது புலம்பெயர் அமைப்புக்கள் மக்களின் பேருதவியே கட்சிகளின் அரசியற் செயற்பாடுகளுக்கு உந்து சக்தியை கொடுத்திருந்தன. தடைக்குப் பின் இவை சாத்தியமா?
நான்காவது பொறி…
புலம்பெயர் அமைப்புக்களின் செயற்பாட்டாளர்கள் என இலங்கைப் படைப் புலனாய்வாளர்களால் ஏற்கனவே இனம் காணப்பட்டவர்கள், இனிவரும் நாட்களில் இனம் காணப்படுபவர்களின் நேரடி உறவினர்களுடன் பேணப்படும் தனிப்பட்ட குடும்ப உறவுகளை இலங்கைப் படைப்புலனாய்வாளர்கள் எவ்வாறு நோக்குவர்? இந்தக் கட்டுரை எழுதிக் கொண்டு இருக்கும் போதே 61 வயதுடைய கரவெட்டியைச் சேர்ந்த பெண் புலம்பெயர் செயல்பாட்டாளர்களுடன் தொடர்புபடுத்தப்பட்டு பயங்கரவாத புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்டதாக செய்தி வெளியாகி இருக்கிறது.. ஆயின் தடை கொண்டுவரப்பட்டால் தாயக்கத்தில் நேரடி உறவினர்களைக் கொண்ட எவரும் புலம்பெயர் செயற்பாடுகளில் தம்மை ஈடுபடுத்துவார்களா?
5ஆவது பொறி
புலம்பெயர் அமைப்புக்களின் மீது தடை ஏற்படுத்தப்பட்டால், புலம்பெயர் நாடுகளில் வசிப்பவர்கள் தமது தாய், தந்தை சகோதரர்களுக்கு அனுப்பப்படும் பெருந்தொகையான பணத்தைக் காரணம் காட்டிக் கூட இலங்கை அரசாங்கத்தால் எவரையும் கைது செய்ய முடியும். காரணம் தடைசெய்யப்பட்ட அமைப்புக்களுடன் தொடர்புடையவரால் அனுப்பப்பட்ட பணம் என இதற்கு பொய்காரணங்கள் கூற முடியும்.. தவிரவும் ஆலயங்கள், பாடசாலைகள், சனசமூக நிலையங்கள், பழைய மாணவர் சங்கங்கள், கிராம அபிவிருத்திச் சங்கங்கள், சிறுவர் முதியோர் நல இல்லங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளுக்கு புலம்பெயர் அமைப்புக்கள் எவ்வாறு உதவுவது? இதன் மூலம் வடக்கு கிழக்கில் புலம்பெயர் உறவுகளால் மேற்கொள்ளப்படும் அனைத்து உதவிகள், அபிவிருத்திகள், சமூகப் பணிகள் யாவும் நிறுத்தப்படும் அபாயம் ஏற்பட மாட்டாதா?
குறிப்பாக புலம்பெயர் அமைப்புக்களின் மீதான இந்தத் தடை, கடந்த இரு தசாப்தங்களுக்கு மேலாக வடகிழக்கை தாங்கி நின்ற புலம்பெயர்ந்த மக்களின் பொருளாதார உதவிகளுக்கு விழுந்த மாபெரும் அடி என்பதோடு, முழுக்க முழுக்க இலங்கை அரசாங்க உதவிகளையே நம்பிவாழும் சமூகமாக ஈழத் தமிழச் சமூகம் மாற்றப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது….
இப்போ இலங்கை அரசாங்கத்திற்கு பொருளாதாரத் தடை விதிக்கக் கோரியநிலை போய் வடக்கு கிழக்கிற்கு பொருளாதாரத் தடை விதிக்கும் நிலையல்லோ ஏற்பட்டு இருக்கிறது.
ஆயின் சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை இரங்க முடியாத நிலைக்கு புலம்பெயர்ந்தவர்களைத் தள்ளும் இலங்கை அரசாங்கத்தின் இந்தப் பாரிய நகர்விற்கு எதிராக என்ன செய்யப் போகிறது புலம்பெயர் சமூகம் ?

















