ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தை ஏற்று தம்மால் இயன்றவற்றை நடைமுறைப் படுத்துவதற்கு அரசு முன்வரவேண்டும். அதற்கு அரசு பச்சைக்கொடி காட்டும் பட்சத்தில் அதற்கு நாம் ஆதரவு வழங்குவோம். அதைவிடுத்து தற்கொலைக் குண்டுதாரி போன்று சர்வதேசத்துடன் மோதக் கூடாது. என்று தெரிவித்துள்ளது பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி. ஜெனிவா தீர்மானத்துக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன என்று அரச தரப்பால் முன்வைக்கப்படும் வாதங்கள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே ஐ.தே.க வின் தலைமைத்துவ சபை உறுப்பினரும், கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் கிரியல்ல இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“உள்நாட்டுத் தேர்தலில் அரசு வெற்றிபெற்றாலோ அல்லது தோல்வியைத் தழுவினாலோ அது ஜெனிவாத் தீர்மானத்தில் தாக்கத்தை ஏற்படுத்தாது. அரசியல் விடயங்களுக்கும், வெளிவிவகாரக் கொள்கை வகுப்புகளுக்குமிடையில் வித்தியாசங்கள் இருக்கின்றன என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும். ஆட்சிபீடமேறும் கட்சியொன்று சர்வதேசத்துடன் சுமுக உறவைப் பேணுவதே சிறந்த வியூகமாகும். இதை விடுத்து சண்டித்தனம் காட்டுவது வெளிவிவகாரக் கொள்கையல்ல. அதன்படி சர்வதேசத்துடனான இலங்கை அரசின் செயற்பாடுகள் தற்கொலைக் குண்டுதாரியின் செயற்பாடுகள் போன்றுதான் இருக்கின்றன. தற்கொலைக் குண்டுதாரி குண்டை வெடிக்கவைத்தால் அது அவருக்கும் பாதிப்பு; மற்றவர்களுக்கும் பாதிப்பு. இதேபோல்தான் அரசின் செயற்பாடுகள் நாட்டுக்கும் அரசுக்கும் பாதகத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.
ஜெனிவா தீர்மானத்தை ஏற்றுத் தம்மால் நிறைவேற்றக்கூடியவற்றை செய்வதற்கு அரசு முன்வர வேண்டும். 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தல், ஊடகக் கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாத்தல், 13ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்தல் போன்ற செயற்பாடுகளை அரசு நினைத்தால் ஒருமாத காலத்துக்குள் செய்து முடிக்கலாம்” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

















