மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டுக்களில் இருந்து அரசாங்கம் தப்பிக்க வேண்டுமாயின் சர்வதேச விசாரணைகளுக்கு இடமளிக்க வேண்டும். அரசாங்கம் தடுத்தாலும் இலங்கை மீதான சர்வதேச விசாரணைகள் நடந்தே தீரும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
ஜெனிவா தீர்மானம் தொடர்பில் இந்தியாவின் முடிவுகள் நிரந்தரமானதல்ல. அதே போல் தமிழ் மக்களுக்கான நிரந்தரத் தீர்வானது சர்வதேச விசாரணையில் மட்டுமே தங்கியுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
ஜெனிவா தீர்மானங்களை அரசாங்கம் எதிர்ப்பது தொடர்பில் அவரிடம் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணையினை மேற்கொள்ளும் முடிவுகளை ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ள நிலையில் இலங்கை அரசாங்கம் தற்போது ஜெனிவா பிரேரணையினைத் தடுத்தாலும் இலங்கை விடயத்தில் சர்வதேச விசாரணைகள் இடம்பெற்றே தீரும். ஐ.நா. விசாரணைக்குழு அதிகாரிகள் இலங்கைக்கு வருவதை தடுத்தாலும் இலங்கைக்கு வெளியிலாவது விசாரணைகள் மேற்கொள்ளப்படும்.
ஐ.நா. விசாரணைக்குழுவினரிடம் இலங்கை தொடர்பிலான போதியளவு யுத்த குற்ற ஆதாரங்கள் இருக்கின்றது. அது தவிர்ந்து யுத்தத்திற்குப் பின்னர் இலங்கை இராணுவத்தினால் வடக்கில் 40 பெண்கள் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டமை மற்றும் வெளிநாடுகளுக்குச் சென்ற இலங்கை இராணுவத்தினரின் வாக்கு மூலங்களும் இருக்கின்றன. எனவே தமிழ் மக்களுக்கான நிரந்தரத் தீர்வொன்றிற்கான விசாரணைகள் இடம்பெறுவது உறுதியே.
எனவே, அரசாங்கம் சர்வதேசத்தினை எதிர்த்து நின்று சவால் விடுவதனால் எவ்வித அர்த்தமுமில்லை. சர்வதேச அமைப்புகளிடம் ஆதாரங்கள் இருக்கின்ற நிலைமையில் அரசாங்கத்தினால் வெற்றி பெற முடியாது. அதேபோல் சர்வதேச விசாரணைகளுக்கு இலங்கை அரசாங்கம் அனுமதித்தால் மட்டுமே இலங்கையில் இடம்பெறும் இனப்பிரச்சினைகளுக்கான தீர்வினை பெற்றுக் கொள்ள முடியும்.
வடக்கில் இராணுவத்தினைப் பலப்படுத்தி தமிழ் மக்களின் நிலங்களையும் சொத்துக்களையும் சூறையாடி அரசாங்கம் சர்வாதிகாரப் போக்கினை வடமாகாணத்தில் கையாள்கின்றது. இது தொடருமாயின் இணக்கப்பாட்டினை ஒரு போதும் எட்ட முடியாது. மக்களிடையே ஒற்றுமையினை ஏற்படுத்த வேண்டுமாயின் அரசாங்கமே விட்டுக் கொடுப்பினை செய்ய வேண்டும் எம்மிடம் விட்டுக்கொடுக்க எதுவுமில்லை.
மேலும் இந்தியா ஜெனீவா பிரேரணையினை நிராகரித்தாலும் அவர்களின் இம்முடிவானது நிரந்தரமானதொன்றல்ல. இந்தியாவின் முடிவில் மாற்றங்கள் ஏற்படும். எனவே தமிழர்கள் விடயத்தில் சர்வதேசம் கொண்டுள்ள அக்கறையினை இலங்கை அரசாங்கமும் கவனத்தில் கொண்டு செயற்பட வேண்டும். தமிழ் மக்களுக்கான நிரந்தரத் தீர்மானத்தினை பெற்றுக் கொடுக்க இலங்கை அரசாங்கம் முயற்சிகளையும் விட்டுக் கொடுப்பினையும் மேற்கொள்ள வேண்டும். ஒரு தலைப்பட்சமான முடிவுகளை அரசாங்கம் எடுக்குமானால் இப்பிரச்சினைகளை ஒருபோதும் தீர்க்க முடியாது. தொடர்ந்தும் சர்வதேசத்தின் அழுத்தங்களை சந்திக்க வேண்டியே ஏற்படும். எனவே இப்போது இலங்கைக்கு இருக்கும் ஒரே தீர்வு சர்வதேச விசாரணைகளே இதனையே தொடர்ந்தும் தாம் வலியுறுத்துவோம் எனவும் அவர் தெரிவித்தார்.

















