முறைப்பாடு செய்யப்பட்டால் ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
சரத் பொன்சேகா அண்மையில் நடைபெற்று முடிந்த மாகாணசபைத் தேர்தலில் வாக்களித்திருந்தார்.
இவ்வாறு தேர்தலில் வாக்களித்தமை தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டால் தேர்தல் திணைக்களம் அது குறித்து விசாரணை நடாத்தும்.
சிவில் உரிமை மறுக்கப்பட்ட நிலையில் சரத் பொன்சேகா வாக்களிப்பில் பங்கேற்றதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தன.
எனினும், இது குறித்து இதுவரையில் உத்தியோகபூர்வமாக முறைப்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை.
என்னை எவரேனும் வைக்கோல் பொம்மையாக சித்தரித்தால் அதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கின்றேன்.
இறந்த பிணமொன்றை விடவும் வைக்கோல் பொம்மைக்கு அதிகாரம் அதிகமாகும்.
அரசியல்வாதி என்ற மிருகங்களிடமிருந்து, மக்கள் என்ற பயிர்களை காப்பாற்றும் வைக்கோல் பொம்மையாக செயற்படுகின்றேன் என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
சரத் பொன்சேகா வைக்கோல் பொம்மையாக தேர்தல் ஆணையாளரை சித்தரித்திருந்தமை மற்றம் வாக்களிப்பில் பங்கேற்றமை தொடர்பில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு மஹிந்த தேசப்பிரிய இந்த பதில்களை அளித்திருந்தார்.

















