மக்கள் குடியிருந்த இடங்களை அபகரித்தமையை மறைக்க 100 ஏக்கர் விவசாய நிலத்தை கையளிக்கிறாராம் கோத்தா

Gotabaya5

கேப்பாபுலவில் இலங்கை அரசின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச 100 ஏக்கர் விவசாய நிலத்தை இன்று நடைபெறும் நிகழ்வில் கையளிக்கவுள்ளதாகவும் தமிழ் மக்களுக்கு அவர் பெரும் கைமாறு செய்வதைப்போலவும் இலங்கை அரசு சார்ந்த ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தாம் காலம் காலமாக வாழ்ந்த சொந்த நிலங்களை அபகிரித்துக்கொண்டு அதை மறைப்பதற்காக 100 வீடுகள் கட்டிக் கொடுத்து அதை மீள்குடியேற்றமாக அரசாங்கம் பிரசாரம் செய்வதாக கேப்பாபுலவு மக்கள் தெரிவிக்கின்றனர். தற்காலிகமாக தம்மை குறித்த பகுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அங்கு நிரந்தரமாக குடியேற்ற கோத்தபாய வருகை தருவாகவும் அவர் தெரிவிக்கின்றனர்.

தமக்கு தமது சொந்த இடமே தேவை எனத் தெரிவித்தபோது கால ஓட்டத்தில் அவை கையளிக்கப்படும் என இராணுவத்தரப்பு தெரிவித்ததாகவும் மக்கள் குறிப்பிடுகின்றனர். இந்நிலையில் தமது சொந்த நிலத்திற்காக பந்தத்தை இன்றைய நாள் நிகழ்வு துண்டித்துவிடுமா என்ற சோகத்தில் மக்கள் இருப்பதாக எமது முல்லைத்தீவு மாவட்ட செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இராணுவத்தினர் விமான படைத்தளத்திற்காக அபகரித்த பல்லாயிரம் ஏக்கர் நிலப்பகுதியில் 100 ஏக்கர் விவசாய நிலத்தை இன்று மக்களிடம் கையளிக்கின்றனர். அத்துடன் கேப்பாபுலவு மாதிரிக் கிராமத்தில் இடம்பெயர்ந்த மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட வீடுகளையும் கோத்தபாய இன்று கையளிக்கிறார். இராணுவத்தினரும் சில வீடுகளை கட்டிக் கொடுத்திருக்கின்றனர்.

தமக்கு தமது காணி நிலமே வேண்டுமென குறிப்பிடும் கேப்பாபுலவு மக்கள் தங்கள் சொந்த இடத்தில் மீள்குடியேறும்வரை தாங்கள் அகதிகள் என்றும் தெரிவிக்கின்றனர். மாதிரிக் கிராமத்தில் மக்கள் குடியேற்றப்பட்டும் செய்தியை சொந்த இடத்தில் மீள்குடியேற்றம் செய்வதைப்போல இலங்கை அரசுக்கு சார்பான சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருப்பது தம்மை நோகடிப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

Tags: , , ,

Leave a Reply