சிரிய நாட்டுப் போரால் புலம் பெயரும் மக்கள் தொகை அதிகரித்த வண்ணமாய் உள்ளதெனத் தெரியவந்துள்ளது. லெபனான் நாட்டில் மட்டும் 10 பத்து லட்சம் மக்களுக்கு மேல் தஞ்சம் கோரியுள்ளதாக ஐ.நா.சபை அறிக்கை தெரிவித்துள்ளது. தினமும் குறைந்தது 2,500 அகதிகள் லெபனான் நோக்கி வருவதாகவும், அந் நாடு அகதிகளால் பிரச்சனைகளின் எல்லையை அடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மிகவும் குறைந்தளவு குழந்தைகள் மட்டும் பாடசாலைகளுக்குச் செல்லும் வாய்ப்புப் பெற்றுள்ளதாகவும், அகதிகள் மிகவும் ஏழ்மையான சூழலில் வாழ வேண்டியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சிரியப் போர், லெபனான் நாட்டையும் அரசியல் ரீதியில் இரண்டாகப் பிளவுபடச் செய்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அங்கு வாழும் கிஸ்புல்லாப் போராளிகள், சிரிய நாட்டின் ஜனாதிபதி பஷார் அல் அசாத்தின் பக்கம் போராடுவதும், சுனிற் முஸ்லீம்கள் சிரியப் போராளிகளின் அனுதாபிகளாக இருப்பதும் உள்நாட்டு அரசியல் பிரச்சனைக்குக் காரணமாகியுள்ளது.
2011 இன் ஆரம்பங்களில் தொடங்கிய சிரிய யுத்தம், இதுவரை 1 லட்சத்து 40 ஆயிரம் உயிர்களைக் காவு கொண்டு, 25 லட்சம் மக்களை வெளிநாடுகளில் அகதிகள் ஆக்கியதோடு, ஒரு கோடி மக்களை அவர்களின் சொந்த நாட்டில் பிறர் உதவி தேடி அலையும் நிலையையும் ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

















