எதிர்க்கட்சிகள் ஜனநாயக ரீதியில் அரசாங்கத்தை கவிழ்க்காவிட்டால், மக்கள் கிளர்ச்சி நடத்தி அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய நிலைமை ஏற்படும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். சில நாடுகளில் இடம்பெற்ற கிளர்ச்சிகளைப் போன்று இலங்கையிலும் கிளர்ச்சிகள் வெடிக்க வாய்ப்பு உண்டு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உடவலவ பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த கால அரசியல் தலைவர்களின் சேவைகளை தற்காலத் தலைவர்கள் மறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளார். பெருமளவிலான அரசியல்வாதிகள் பொருளாதார நன்மைகளை அடிப்படையாகக் கொண்டே தேர்தலில் போட்டியிடுகின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமது ஆட்சிக் காலத்தில் லஞ்ச ஊழல் மோசடிகளை தடுக்க பல்வேறு வழிகளில் முயற்சிகளை செய்து வந்ததாகவும், தற்போது அந்த நிலைமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
















