அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் ஜனாதிபதி தேர்தலை நடாத்த அரசு திட்டமிட்டிருந்த நிலையில் நடந்து முடிந்த மேல் மற்றும் தென் மாகாண சபை தேர்தல் முடிவு கிடைத்த பிற்பாடு அரசும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவும் அத்திட்டத்தை கைவிட்டுள்ளனர் என ஐ.தே.க. தேசிய தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இதேவேளை இத்தேர்தல் முடிவினூடாக மக்கள் சர்வாதிகார ராஜபக் ஷ ரெஜிமண்ட் என்ற மரத்தினை பிடிங்கியெறிய அம்மரத்தின் ஆணிவேரினை இலகுபடுத்தியுள்ளனர். இனிமேல் அம்மரத்தை பிடிங்கி எறிய வேண்டியது ஐ.தே. கட்சியினுடைய பொறுப்பாகும். அதிலிருந்து எம்மால் விடுபட முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேல், தென் மாகாண சபைகளுக்கு ஐ.தே.க. வினால் தெரிவானோர்களுக்கு நேற்று முன்தினம் ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்கவினால் நியமன கடிதம் வழங்கி வைக்கும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

















