காணாமல்போன மலேசிய ‘எம்.எச். 370′ விமானத்தை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சீனக் கப்பலொன்றுஇ அந்த விமானத்திலிருந்து வெளிப்பட்டிருக்க சாத்தியமான முதலாவது சமிக்ஞையொன்றை அவதானித்து சிறிது நேரத்தில் இரண்டாவது சமிக்ஞையொன்றை இனங் கண்டறிந்துள்ளதாக அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
தென் இந்து சமுத்திரத்தில் சனிக்கிழமை சில மணித்தியால இடைவெளியில் மேற்படி இரு சமிக்ஞைகளும் இனங்கண்டறியப்பட்டுள்ளதாக இந்த தேடுதல் நடவடிக்கையை ஒருங்கிணைப்பதில் ஈடுபட்டுள்ள அவுஸ்ரேலிய ‘ஜே.ஏ.சி.சி’ அமைப்பு தெரிவித்துள்ளது.
மேற்படி சமிக்ஞைகளின் கண்டுபிடிப்பானது காணாமல்போன விமானத்தை தேடுவதற்கான முக்கியமான சான்றாகவுள்ளதாக ‘ஜே.ஏ.சி.சி’ அமைப்பின் தலைவர் அங்கஸ் ஹுஸ்டன் தெரிவித்தார்.
எனினும் மேற்படி சமிக்ஞைகள் காணாமல்போன விமானத்தினுடையவையா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என அவர் கூறினார்.
இந்நிலையில் குறிப்பிட்ட சமிக்ஞைகள் பெறப்பட்ட பிராந்தியத்தில் மேலதிக ஆய்வை மேற்கொள்ளும் முகமாக அந்த பிராந்தியத்தை நோக்கி பிரித்தானிய கடற்படை கப்பலான ‘எச்.எம்.எஸ். எகோ’ பயணத்தை மேற்கொண்டுள்ளது.
அந்தக் கப்பல் குறிப்பட்ட பிராந்தியத்தை இன்று திங்கட்கிழமை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேசமயம் அந்த பிராந்தியத்தை நோக்கி அவுஸ்திரேலிய விமானங்கள் சென்றுள்ளதாக ஹுஸ்டன் கூறினார்.
மேற்படி பிராந்தியத்தில் எங்கிருந்தாவது 3ஆவது சமிக்ஞை ஒன்று இனங்கண்டறியப்படுமாயின்இ அவ்விடத்தை நோக்கி அவுஸ்திரேலிய கடற்படைக் கப்பலான ஓசன் ஷீல்ட் செல்லும் என அவர் தெரிவித்தார்.
மலேசிய ‘எம்.எச்.எம்.370′ விமானம் கடந்த மார்ச் 8 ஆம் திகதி கோலாலம்பூரிலிருந்து பீஜிங் நகருக்கு 239 பேருடன் பயணித்த வேளை காணாமல் போனது.
அந்த விமானம் இந்து சமுத்திரத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக நம்பப்படுகின்ற நிலையில் அந்த சமுத்திர பிராந்தியத்தில் விமானத்தின் சிதைவுகள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
‘எச்.எம்.எஸ். எகோ’ கப்பலும் ‘ஏ.டி.வி.ஓஸன் ஷீல்ட்’ கப்பலும் விமான கறுப்புப் பெட்டி பதிவு கருவிகளால் நீருக்கு கீழ் வெளியிடப்படும் சமிக்ஞைகளை இனங்கண்டறியக்கூடிய தொழில் நுட்ப வசதியைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆனால்இ விமான கறுப்புப் பெட்டியிலான பற்றரி மூலம் சக்தியூட்டப்பட்டு வெளிவரும் சமிக்ஞைகள் 30 நாட்களின் பின் செயலிழக்க ஆரம்பிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
சீன ‘ஹெய்ஸுன் 1′ கப்பலால் முதலாவது சமிக்ஞை அவதானிக்கப்பட்ட இடத்திலிருந்து 2 கிலோமீற்றருக்கும் குறைவான இடத்தில் அவுஸ்திரேலிய நேரப்படி சனிக்கிழமை மாலை இரண்டாவது சமிக்ஞை அவதானிக்கப்பட்டுள்ளது. அந்த சமிக்ஞை சுமார் 30 செக்கன்கள் நீடித்துள்ளது.
மேற்படி சமிக்ஞையானது விமான கறுப்புப்பெட்டி பதிவு கருவிகளிலிருந்து வெளிப்படுவதையொத்த அதிர்வலைகளைக் கொண்டிருந்துள்ளது.
பேர்த் நகரின் வட மேற்கே சுமார் 2,000 கிலோமீற்றர் தூரத்திலுள்ள 3 பிரதேசங்களில் காணாமல்போன விமானத்தை தேடும் நடவடிக்கையில் 12 விமானங்களும் 13 கப்பல்களும் ஈடுபட்டுள்ளன.
216,000 சதுர கிலோமீற்றர் பரப்பளவில் ஞாயிற்றுக்கிழமை தேடுதல் நடத்தப்பட்டது.
சனிக்கிழமை இனங்கண்டறியப்பட்ட சமிக்ஞைகள் ‘எம். எச். 370′ விமானத்தினுடையவையா என்பதற்கு எதுவித நிச்சயமும் இல்லை என்ற போதும், அவை நம்பிக்கையை ஏற்படுத்துவனவாக உள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அப்பொட் தெரிவித்தார்.
மேற்படி சமிக்ஞையானது 37.5 கிலோ ஹேர்ட்ஸ் அளவானதாகும்.
இதன் ஒலியை அந்தக் கப்பலிலிருந்த மூவர் செவிமடுத்த போதும், அந்த சமிக்ஞை திடீரென தோன்றி மறைந்ததால் அதனை பதிவு செய்ய முடியவில்லை என கூறப்படுகிறது.
இந்த சமிக்ஞைகள் அவதானிக்கப்படுவதற்கு சில மணித்தியாலங்களில் சுமார் 90 கிலோமீற்றர் தூரத்திற்கு அப்பால் ஒரு தொகை வெள்ளை நிறப் பொருட்கள் மிதப்பதை சீன இராணுவ விமானமொன்று அவதானித்துள்ளது.

















