வடக்கில் சத்தமின்றி தொடரும் கைதுகளால் மக்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை வேளையில் பொலிகண்டி கடல்பகுதியில் வைத்து ஒரே நேரத்தில் ஐவர் கைது செய்யப்பட்டதனால் கரையோரப்பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவி வருகின்றது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் நேற்றைய தினம் கடல்தொழிலுக்குச் சென்ற சிலரின் விபரத்தை தேடிய பொலிசாரும் பயங்கரவாத தடுப்புப்பிரிவினரும் அவர்கள் கடலுக்குச் சென்றுள்ளதை அறிந்ததும் கடல் கரையில் நீண்ட நேரம் காத்திருந்து அவர்கள் கரைசேர்ந்ததும் கரையில்வைத்தே கைது செய்து கொண்டு சென்றுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 41 வயதுடைய ப.ரெஜினோல்ட்- 41 வயதுடைய வி.மரியதாஸ், 31 வயதுடைய க.ராஜா, 44 வயதுடைய எஸ்.பாபு மற்றும் 44 வயதுடைய எம்.மிக்கேல்பிள்ளை ஆகியோர் என இனம்காணப்பட்டு உள்ளனர்.
இவர்கள் அனைவரும் பயங்கரவாத தடுப்புப்பிரிவு பொலிசாரினால் கைது செய்யப்பட்டு உடனடியாகவே வவுனியா கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் குடும்பஸ்தர்கள் ஆவர். கைது செய்யப்பட்டமைக்காண காரணம் இதுவரை தெரியவில்லையென குடும்பத்தவர்கள் கூறுகின்றனர்.

















