வேள்ட் விஷன் கிரான் பிராந்திய நிறுவனத்தால் சிறந்த விவசாயிகளுக்கு சின்ன வெங்காய விதை விநியோக நிகழ்வு வேள்ட் விஷன் கிரான் பிராந்திய பங்காளர் நிறுவன முனுனுஏகு முகாமையாளர் ச.மகாலிங்கம் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் வேள்ட் விஷன் கிரான் பிராந்திய நிறுவனத்தின் பொருளாதார அபிவிருத்தி திட்ட இணைப்பாளர் ஜே.ஆர்.அகிலானந்தன்;, மட்டக்களப்பு வடக்கு பகுதி, விவசாய உதவிப் பணிப்பாளர் வி.லிங்கேஸ்வரராசா, கிரான் கிழக்கு, கிராம சேவக உத்தியோகத்தர் எஸ்.ரவீந்திரன் மற்றும் கிரான் கோறளைப்பற்று தெற்கு பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.
இங்கு வி.லிங்கேஸ்வரராசா உரையாற்றிய போது, ஒரு சதுர மீற்றருக்கு குறைந்தது ஒரு கிலோ மாட்டெரு பாவிக்கப்படல் வேண்டும் எனவும், நிலத்தின் தன்மைக்கேற்ப நீர் ஊற்றப்படல் வேண்டும். மணல் தரையாக இருந்தால் அதிகமான நீர் ஊற்றப்படல் வேண்டும் எனவும் கூறினார்.
எமது நாட்டு அரசினால் வெங்காயத்தின் இறக்குமதியை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதனால் தற்போது நீங்கள் திறன்பட வெங்காயச் செய்கையை மேற்கொள்ளும் பட்சத்தில் அதற்கான பூரண பயனைப் பெற முடியும்;. மாட்டெரு, கூட்டெரு போன்றவற்றை அளவுக்கேற்ப கிரமமாக உபயோகிப்பதன் மூலம் வெங்காயச் செய்கையின் பயனை அதிகமாக பெற வாய்ப்புண்டு என மேலும் தெரிவித்தார்.
அத்தோடு இங்கு கிரான் கிழக்கு கிராம சேவக உத்தியோகத்தர் எஸ்.ரவீந்திரன் தெரிவிக்கையில், மட்டக்களப்பு மாவட்டமானது வறுமை நிலையில் முதல் இடத்தில் உள்ளதாகவும், வறுமை எம்மைப் பிடித்த நோய் எனவும் இதனைப் போக்குகின்ற மருந்தாக எமது முயற்சியே இருக்க வேண்டும் என்றும் கூறினார்.
அரச சார்பற்ற எமது வேள்ட் விஷன் நிறுவனமானது எமது பிரதேச மக்களுக்கு மீன்பிடி உபகரணங்கள், வீட்டுத் தோட்டம், வெங்காயச் செய்கை, சுயதொழில் போன்ற பல உதவிகளைச் செய்து வந்த போதிலும் அதனைப் பயன்படுத்தி வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான முயற்சியை எமது பயனாளிகளே செய்ய வேண்டும்.
இதனைத் தவிர அரசாங்கமானது வறுமையைக் குறைத்து பொருளாதாரத்தை உயர்;த்துவதற்காக ‘திவிநெகும’ எனும் திட்டத்தைப் பிரகடனப்படுத்தியுள்ளது. ஆனபோதிலும் பயனாளிகளின் முயற்சியின்மையும், உள்ளீடுகளைச் சரியான விதத்திலும் பயன்படுத்தாத தன்மையுமே, வறுமை நிலை குறையாமல் நாம் அல்லல் படுகின்றோம் என்றார்.
இங்கு பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.ரொபட் தெரிவிக்கையில், அரசாங்கமோ, அரச சார்பற்ற நிறுவனமோ எவ்வளவு உதவிகள் செய்தாலும் பயனாளிகளின் 100 வீத பங்களிப்பு இருந்தால் மட்டுமே பூரண பயனைப் பெற முடியும்;.
வட மாகாணத்தில் யாழ்ப்பாணத்தைப் பொறுத்த வரையில் எந்த விதமான உதவிகளும் கிடைக்காத போதும், அவர்களின் முன்னேற்றம் அளப்பரியது. அந்த வகையில் எமது பிரதேச மக்கள் கொடுத்து வைத்தவர்கள். அனைத்து உதவிகளும் தமது காலடியில் கிடைத்தும் அதனைப் பயன்படுத்தாதது கவலைக்குரிய விடயமாகும்.
அனைத்து உதவிகளையும் பெற்றும் கூட அதனைப் பயன்படுத்த முயற்சி செய்வதில்லை. அதனை முறைப்படி செய்து வந்தால் வருமானம் அதிகரிப்பதன் மூலம் பொருளாதாரத்தை அதிகரிக்கலாம்.
இங்கு வேள்ட் விஷன் கிரான் பிராந்திய நிறுவனத்தின் பொருளாதார அபிவிருத்தி திட்ட இணைப்பாளர் ஜ.ஆர்.அகிலானந்தன் தெரிவிக்கையில், வாழ்வாதாரத்தை உயர்த்தும் உள்ளீடுகளை வழங்குவதில் அதாவது பங்கு கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். வேள்ட் விஷன் நிறுவனத்திற்கு வருகின்ற பணமானது கனடா நாட்டிலிருந்து முகம் தெரியாத நபர்கள் கஸ்ரப்பட்டு உழைத்து அதில் ஒரு பகுதியை அனுப்புவதாகவும், அந்தப் பணத்தின் மூலம் எமது கிரான் பிராந்தியத்தில் கல்வி, பொருளாதார, சுகாதார வேலைத் திட்டங்களைச் செய்து வருகின்றோம்.
சென்ற வருடம் வழங்கப்பட்ட வெங்காய உற்பத்தியில் கண்ட வெற்றியின் பயனாகவே இந்த ஆண்டும் நடைமுறைப்படுத்தியுள்ளதாகவும், இந்த வருடம் சின்ன வெங்காய உற்பத்தி தொடர்பான பயிற்சியில் கலந்து கொண்ட 36 விவசாயிகளுக்கே சின்ன வெங்காயம் மற்றும் தொற்று நீக்கி, மாட்டெரு போன்றன வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
அதனை சிறந்த முறையில் பயிரிட்டு அமோக விளைச்சலைப் பெற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டதுடன், தற்போதுள்ள பயனாளிகளின் வெற்றியே இன்னும் அதிக பயனாளிகளைத் தெரிவு செய்வதற்கு ஏதுவாக அமையும் எனவும் கூறினார்.
இதன்போது தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு சின்ன வெங்காய விநியோகம் இடம்பெற்றது.
















