இந்தியா தமிழ் மக்களுக்கு மெய்யாகவே ஆதரவாக செயற்பட்டு வருகின்றதா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுப்பதில் இந்தியா கரிசனை கொள்ளுமா என்பது சந்தேகமே என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மான வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்காமை, இவ்வாறான சந்தேகத்தை வலுப்பெறச் செய்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் மிக நீண்ட காலமாக சுமூகமான உறவுகள் கிடையாது என்ற போதிலும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் பாகிஸ்தான் இலங்கை தொடர்பில் சமர்பித்த யோசனைக்கு இந்தியா இறுதி நேரத்தில் ஆதரவளித்திருந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.இதன் மூலம் இந்தியாவின் நடவடிக்கைகள் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் நிறைவேற்றப்பட்ட இரண்டு தீர்மானங்களுக்கு இந்தியா ஆதரவாக வாக்களித்திருந்த போதிலும் இம்முறை வாக்களிப்பில் பங்கேற்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வாக்களிப்பில் பங்கேற்காமல் விடும் தார்மீக உரிமை இந்திய மத்திய அரசாங்கத்திற்கு கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே இந்தியாவின் நடவடிக்கைகள் தொடர்பில் தமிழ் மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

















