இலங்கைக்கு சோதனை காலம் ஆரம்பம்:சம்பிக்க ரணவக்க

sambikka-ranavakka

எதிர்வரும் ஏழு மாதங்கள் இலங்கைக்கு சோதனை காலம். சர்வதேச ரீதியிலும், தேசிய ரீதியிலும், சதிகாரர்கள் கத்தியை தீட்டிக்கொண்டிருக்கின்றார்கள் எனவே, மாகாண சபைகளில் எமக்குf; கிடைத்த வெற்றியை இதற்கெதிராகப் பயன்படுத்தி எம்மை ஸ்திரப்படுத்திக்கொள்ள வேண்டுமென அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

சுவரொட்டிகள் இல்லாமல் தேர்தலில் போட்டியிட்டு சாதனை படைத்தவர் உதய கம்மன்பில என்றும் அமைச்சர் புகழாரம் கூட்டினார்.

மேல்மாகாண சபை தேர்தலில் ஜாதிக ஹெல உறுமயவின் சார்பில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்டு வெற்றி பெற்று விவசாய, கமத்தொழில் அபிவிருத்தி, சிறிய நொடுஞ்சாலைகள், தொழிற்றுறை, சூழல் மற்றும் கலாசார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள உதயகம்மன்பில நேற்று திங்கட்கிழமை கொழும்பிலுள்ள முதலமைச்சர் அலுவலகத்திலுள்ள தனது அமைச்சின் அலுவலகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.

இதன் பின்னர் அங்குள்ள கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் சம்பிக்க ரணவக்க இதனைத் தெரிவித்தார்.

அமைச்சர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்; எதிர்வரும் 7 மாதங்கள் எமது நாட்டுக்கு சோதனை காலமாகும்.

வெளிநாடுகள் எமது நாட்டுக்குள் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் நொருக்கடிகளை ஏற்படுத்தி ஸ்திரமற்ற நிலைமையை உருவாக்க முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றது.

அதேபோன்று உள்நாட்டிலும் அடிப்படைவாத சக்திகள் வெளிநாடுகளின் நிகழ்ச்சி நிரலுக்கு துணை போகின்றன.

நாட்டிற்குள் பிரச்சினைகளை ஏற்படுத்தி குழப்பகரமான சூழலை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.

எனவே உள்நாட்டு, வெளிநாட்டு சதிகாரர்களிடமிருந்து நாட்டைப் பாதுகாக்கவேண்டும்.

இந்த சவாலுக்கு சிறப்பான முறையில் நாமும் முகம் கொடுக்கவேண்டும்.

எனவே, மாகாண சபை தேர்தல்களில் பெற்ற வெற்றி மூலம் எமக்குக் கிடைத்த அமைச்சுக்கள் ஊடாக பொருளாதார, சமூக மாற்றங்களை ஏற்படுத்தி எம்மை ஸ்திரப்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் அப்போதுதான் வெளிநாட்டு உள்நாட்டு சதிகாரர்களிடமிருந்து நாட்டைப் பாதுகாக்கமுடியும்.

எமது கட்சியின் சார்பில் போட்டியிட்ட உதயகம்மன்பில சுவரொட்டி அரசியல் கலாசாரத்தை கைவிட்டு உலக அளவில் அரசியலில் மேற்கொள்ளப்படும் நவீன முறைமைகளைப் பாவித்து மாபெரும் வெற்றியை மேல் மாகாண சபை தேர்தலில் பெற்றுள்ளார். இது எமக்கு பெருமையளிக்கின்றது என்றும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

அதிகாரிகள் பொய் கூறாது. உண்மையாக நடந்து கொள்ளவேண்டும்.இல்லாவிட்டால் அரசியல்வாதிகள் தடம்புரண்டு விடுவார்கள்.

அதிகாரிகள் அரசியல்வாதிகளுக்கு வழங்கும் தகவல்களில் உண்மை இருக்க வேண்டும் இதனையே நான் எதிர்பார்க்கின்றேன்.

எனக்குக் கிடைத்த அமைச்சில் அனைவரும் ஒரு குடும்பமாக நினைத்து செயற்பட்டால் வெற்றிகளை பெறமுடியுமென்றும் கம்மன்பில தெரிவித்தார்.

அந்நிகழ்வில் மேல் மாகாண சபை அமைச்சர்கள், உறுப்பினர்கள் மற்றும் அதிகார்கள் எம்.பி.க்களான திலங்க சுமதிபால, சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே, அர்ஜூன ரணதுங்க, ஆளுநர் அலவி மெளலானா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags: , , ,

Leave a Reply