நாட்டுக்கு நலன் தரும் போக்கை கைக்கொள்வதால் பாதிப்பு வராதே….

tamil-peoples

போர்க் குற்றச்சாட்டுக்களை நிராகரித்து வரும் இலங்கை அரசு, புலம்பெயர் தமிழர் அமைப்புகள் பதினைந்தைத் தடை செய்துள்ளதோடு, அவற்றின் பிரதிநிதிகள் 424 பேர் இலங்கை வருவதற்குத் தடையும் விதித்துள்ளது.
இதே வேளை, ஜெனிவாவில் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை அரசு மீதான தீர்மானத்தின் பிரகாரம், மனித உரிமை மீறல்கள் குறித்த ஐ.நாவின் விசாரணை அடுத்த மாதத்தில் ஆரம்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது தகவல்கள் வெளிவந்துள்ளன.

மேலும் , மேற்படி விசாரணையில் சாட்சியம் வழங்குவதற்கு அனைத்துலக மட்டத்திலும் இந்நாட்டு மட்டத்திலும் சாட்சியமளிப்பதற்குப் பலர் தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஜெனிவா தீர்மானத்துக்கு அமைவாக, ஐ.நா.மனித உரிமைகள் பேரவையினால் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் மூலம் போர்க் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், இலங்கை அரசைக் குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த முடியும் என அனைத்துலக சட்டத்தரணிகள் பலரும் சுட்டிக் காட்டி உள்ளனர்.

மேலும், இறுதிப் போரின் போது வன்னியில் பணியாற்றிய வைத்தியர்களும், இறுதித் தருணத்தில் தமிழ் மக்கள் கொல்லப்பட்ட கோரச் சம்பவங்களையும் அனைத்துலகத்துக்கு வெளிப்படுத்துவர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சனல் 4 தொலைக்காட்சி நிறுவனத்தால் வெளியிடப்பட்ட “இலங்கையின் கொலைக்களம்’ , “யுத்த சூனிய வலயம்’ போன்ற போர்க்குற்றக் காணொலிகள் மற்றும் பல ஆவணங்களை முக்கிய ஆதாரங்களாக முன்வைத்து, அவை தொடர்பான சாட்சியங்களை வழங்குவதற்குப் புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்கள் தயாராகி உள்ளனர் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஜெனிவாத் தீர்மானத்தில் அனைத்துலக விசாரணை வலியுறுத்தப்பட்டுள்ள நிலையில், புலம்பெயர் தமிழர்களின் சாட்சியங்களைத் தடுக்கும் நோக்கத்துடனேயே புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மீது தடை விதிக்கப்பட்டது எனக் கொள்ளலாம். இந்தத் தடையை மேற்கொள்ள அரசு முடிவு செய்தமைக்கு அதுவே பிரதான காரணமாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது; அவதானிகளும் சுட்டிக்காட்டுகின்றனர்.

மேலும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் இங்கு வருவதற்கு அரசு அனுமதிக்காது என்று பெரும்பாலும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆயினும், மனித உரிமைகள் ஆணைக்குழு வெளிநாட்டிலிருந்தவாறே விசாரணைகளை மேற்கொள்ள முடியும். அதனைக் கருத்தில்கொண்டே புலம்பெயர் தமிழர் அமைப்புகளை அரசு தடை செய்துள்ளது என்றும் கருதலாம்.

இலங்கை அரசு மீதான அனைத்துலக விசாரணைக்கு, தமது நாடு நெருங்கிய நிலையில் செயற்படும் என்று பிரித்தானியப் பிரதமர் தெரிவித்திருப்பதும் இங்கே கருத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும்.

பிரதமர் டேவிட் கமரூன், பிரிட்டன் நாடாளுமன்றத்தில் உரையாற்றியவேளை, இலங்கை அரசின் பொறுப்புக் கூறல் மற்றும் மனித உரிமைகளைப் பேணுதல், அந்த நாட்டில் நல்லிணக்கத்தைப் பேணுதல் என்பன சமாதானத்துக்கு அவசியமானவை என்று அர்த்தபுஷ்டியுடன் தெரிவித்திருக்கிறார். இது குறித்து பொதுநலவாய நாடுகளின் தலைவர்களுடன் தனிப்பட்ட முறையில் தாம் கலந்துரையாடியதாகவும் தகவல் வெளியிட்டுள்ளார்.

தமிழ் மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் அமைப்புகளைச் சேர்ந்த எல்லோரையும் ஒட்டுமொத்தமாகப் பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க முடியுமா? என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளமையும் இங்கே குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
எவர், எந்த நாடு, எந்த அமைப்பு என்னென்னவற்றைக் கூறினாலும் அவற்றைக் காதில் போட்டுக் கொள்ளுமா எங்கள் நாட்டு அரசு? என்ற வினாவே மேல் எழுகிறது.
இப்போதைய நிலையில்,அனைத்துலக நாடுகளுடன் இசைந்து, ஒத்துழைப்பு நல்கிச் செயற்பட மனம் கொள்ளாமல் முரண்டுபிடிக்கும் போக்கு நீடித்தால், எங்கள் நாட்டுக்கு அவை உதவப் போவதில்லை என்பதே பெறுபேறாக எழும்.
அனைத்துலக நட்புறவு எப்போதும் நாட்டுக்கும் மக்களுக்கும் நலன்களைத் தரும் என்பது குறித்து சிந்திக்கலாகாதா ….

Tags: , ,

Leave a Reply