டைரக்டர் விஜய்க்கும், நடிகை அமலாபாலுக்கும் பல வருஷங்களாகவே ரகசியக் காதல் இருந்து வருகிறது என்று கோடம்பாக்கத்தில் கிசுகிசுத்தாலும் கிசுகிசுத்தார்கள் அது இப்போது உண்மையாகவே ஆகி விட்டது.
ஆமாம், விஜய் உடனான தனது எதிர்கால வாழ்க்கை குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பேன் என்றூ கூறியிருக்கிறார் அமலாபால்.
தமிழில் 2011 ஆம் ஆண்டு ரிலீசான ‘வீரசேகரன்’ என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் அமலாபால். அடுத்து நடித்த ‘சிந்து சமவெளி’ படத்தில் மாமனாரை கரெக்ட் செய்யும் சர்ச்சைக்குரிய கேரக்டரில் நடித்தார். இதனால் அந்தப்படமும் அவருக்கு கை கொடுக்கவில்லை. அதற்குப் பிறகு வந்த பிரபுசாலமனின் ‘மைனா’ படம் அமலாபாலுக்கு தமிழ்சினிமாவில் மிகப்பெரிய இடத்தை கொடுத்தது.
தொடர்ந்து விக்ரமுடன் தெய்வத் திருமகள், ஆர்யாவுடன் வேட்டை, விஜய்யுடன் தலைவா என முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்தார். அதோடு தெலுங்கு பட உலகிலும் முன்னணி ஹீரோயினாக இருக்கிறார்.
டைரக்டர் விஜய்யின் தெய்வத் திருமகள் படத்தில் நடித்த போது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. ஆனால் மீடியாக்களிடம் இதை இரண்டு பேருமே மறுத்தனர். தொடர்ந்து விஜய் நடிப்பில் விஜய் டைரக்ட் செய்த தலைவா படத்திலும் அமலாபாலே ஹீரோயினாக நடித்தார். அதற்கு டைரக்டர் விஜய்யின் ரெகமெண்டேஷன் தான் முக்கிய காரணம் என்று சொல்லப்பட்டது.
இந்நிலையில் நேற்று சென்னையில் நடைபெற்ற டைரக்டர் விஜய்யி சொந்த தயாரிப்பான சைவம் படத்தின் ஆடியோ பங்ஷனில் மெனக்கிட்டு வந்து கலந்து கொண்டார் அமலாபால். தான் ஹீரோயினாக நடிக்கும் படங்களின் பப்ளிசிட்டிக்கே பெரும்பாலும் வராத அமலாபால் நேற்று தான் நடிக்காத படத்தின் ஆடியோ பங்ஷனுக்கு வந்து எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்தது. அதேபோல இதுபோன்ற பங்ஷன்களுக்கு மாடர்ன் ட்ரெஸ்சில் கவர்ச்சியாக வரும் அவர் நேற்று சீவிச் சிங்காரித்து புதுப்பொண்ணு போல பட்டுச்சேலையில் தனது குடும்பத்துடன் ஆஜராகியிருந்தார்.
விழாவில் பேசிய நடிகர் பார்த்திபன் கூட டைரக்டர் விஜய் விரைவில் ‘அமலா’க்கப்பிடிவில் சிக்கப்போகிறார் என்று அவர்களின் காதல் ரகசியத்தை மேடையில் போட்டு உடைத்தார்.
இதனால் முழுக்க நனைந்த பின் முக்காடு எதற்கு என்று யோசித்த அமலாபால் இன்று அவசரம் அவசரமாக தனது சார்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.
அதில் ‘டைரக்டர் விஜய் வெளிநாட்டுக்கு போயிருப்பதால் இப்போதைக்கு என்னால் எதுவும் சொல்லமுடியாது. அவர் வந்த பிறகு இருவரும் ஒன்றாக இணைந்து எங்கள் எதிர்கால வாழ்க்கை குறித்து முறையாக அறிவிப்போம். அதுவரை எல்லோரும் பொறுமையாக இருக்கவும்’ என்று கூறியிருக்கிறார்.

















