மும்முனைப் போட்டி: சூடு பிடிக்கும் டெல்லி தேர்தல் களம்

election

டெல்லி பிரதேசத்தில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளிலும் முதல் முறையாக மும்முனைப் போட்டி நிலவுகிறது.
கடந்த 2009 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அனைத்துத் தொகுதிகளையும் கைப்பற்றியது. ஆனால், கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்தது. குறிப்பாக புதிதாக உருவாகிய அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி எழுச்சி பெற்றது. காங்கிரஸ் தோல்விக்கு ஆம்ஆத்மிக்கு மக்களிடையே கிடைத்த பெரும் ஆதரவே காரணம் என்று சொல்லப்பட்டது.

டெல்லியில் பல ஆண்டுகளாக காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகளுக்கு இடையேதான் இருமுனைப் போட்டியாக இருந்து வந்தது. ஆனால், இம் முறை சட்டப்பேரவைத் தேர்தலைத் தொடர்ந்து, மக்களவைத் தேர்தலிலும் ஆம்ஆத்மி போட்டியிட முடிவு செய்து வேட்பாளர்களைக் களம் இறக்கியுள்ளது. இதனால், டெல்லி பிரதேசத்தில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளிலும் மும்முனைப் போட்டி நிலவுகிறது. மேலும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் முலாயம் சிங்கின் சமாஜ்வாதி கட்சியும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. ஆனால், இக் கட்சிகளால் பெரிய அளவில் போட்டி இருக்காது என்று கூறப்படுகிறது.

7 மக்களவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட 70 சட்டப் பேரவைத் தொகுதிகளில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக 31, ஆம்ஆத்மி 28, காங்கிரஸ் 8 இடங்களில் வெற்றி பெற்றன.

சாந்தினி செளக் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட 10 பேரவைத் தொகுதிகளில் ஆம்ஆத்மி 4, பாஜக 3, காங்கிரஸ் 2, ஐக்கிய ஜனதா தளம் 1-இல் வெற்றி பெற்றுள்ளன.

வடகிழக்கு டெல்லி தொகுதியில் 10 பேரவைத் தொகுதிகளில் பாஜக 5, ஆம்ஆத்மி 3-இல் வெற்றி பெற்றுள்ளன. கிழக்கு தில்லியில் உள்ள 10 பேரவைத் தொகுதிகளில் ஆம்ஆத்மி 5, பாஜக 4 இடங்களிலும், புது டெல்லி தொகுதியில் உள்ள 10 பேரவைத் தொகுதிகளில் ஆம்ஆத்மி 7, பாஜக 3 இடங்களிலும் வெற்றி பெற்றன. வடமேற்கு டெல்லியில் உள்ள 10 பேரவைத் தொகுதிகளில் பாஜக 5, ஆம் ஆத்மி 2-இல் வெற்றி பெற்றன.

மேற்கு டெல்லியில் மொத்தமுள்ள 10 பேரவைத் தொகுதிகளில் பாஜக 5, ஆம்ஆத்மி 4, தெற்கு டெல்லியில் உள்ள 10 பேரவைத் தொகுதிகளில் பாஜக 7, ஆம்ஆத்மி 3 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் டெல்லி மக்களவைத் தேர்தலில் மும்முனைப் போட்டி இருந்தாலும், பாஜக-ஆம்ஆத்மி ஆகிய கட்சிகளுக்கு இடையேதான் கடும் போட்டி நிலவுவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

Tags: , ,

Leave a Reply