இலங்கையில் அண்மையில் கைப்பற்றப்பட்ட போதைவஸ்து தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் குறித்து பிரித்தானியா இராஜதந்திரி காட்டும் அக்கறை குறித்து கொழும்பில் வியப்பு வெளியிட்டுள்ளது.
தெ ஹிந்து இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 3 ஆம் திகதியன்று பிரித்தானிய உதவி உயர்ஸ்தானிகர், இலங்கையின் பொலிஸ் மா அதிபர் என் கே இலங்கக்கோனிடம் சந்திப்பு ஒன்றுக்கான கோரிக்கை விடுத்தார்.
போதைவஸ்து கைப்பற்றல் தொடர்பில் இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள மூன்று நாட்டவர்களில் ஒருவர், இந்தியாவில் உள்ள பிரித்தானிய அதிகாரிகளுக்கு தகவல் தருபவர் என்ற அடிப்படையிலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டதாக பிரித்தானிய ராஜதந்திரி விளக்கமளித்துள்ளார்.
இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டமையை பொலிஸ் மா அதிபர் இலங்கக்கோன் உறுதிப்படுத்தியுள்ளார். எனினும் இது தொடர்பில் பிரித்தானியாவின் இலங்கை உயர்ஸ்தானிகரகம் எதனையும் தெரிவிக்கவில்லை.
இந்தநிலையில் விசாரணைகள் முடிவடையாதபடியால் விசாரணைகள் முடிந்த பின்னர் இந்த சந்திப்பை மேற்கொள்ளலாம் என்று இலங்கையின் பொலிஸ் மா அதிபர் பிரித்தானிய இராஜதந்திரிக்கு பதிலளித்துள்ளார்.
கடந்த மார்ச் 6 ஆம் திகதியன்று கொழும்பு துறைமுகத்தில் வைத்து சுங்கப் பகுதியினர் 35 கிலோ கிராம் ஹெரோயினை கைப்பற்றினர்.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்படி பாகிஸ்தானிய பிரஜை ஒருவரும் இலங்கை வம்சாவளியான கனடிய பிரஜை மற்றும் இலங்கையர் ஒருவர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவம் முதலில் பாகிஸ்தானிய பிரஜை கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவர் கண்டிக்கு தப்பிசெல்வதற்கு உதவிய கனடிய பிரஜை கைது செய்யப்பட்டார்.
இவர்கள் இருவரும் அடிக்கடி இலங்கைக்கு வந்துசெல்பவர்கள் என்று விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

















