விஜய்யின் ‘கத்தி’ படத்தை தயாரிக்கும் லைக்கா மொபைல்ஸ் நிறுவனத்துக்கும், இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அதன் தயாரிப்பாளர்களில் ஒருவரான ‘ஐயங்கரன்’ கருணாமூர்த்தி கூறினார்.
விஜய்- ஏ.ஆர்.முருகதாஸ் இணைந்திருக்கும் ‘கத்தி’ படம் ஆரம்பித்ததிலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. அதிலும் குறிப்பாக ‘கத்தி’ படத்தை தயாரித்து வரும் லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இலங்கையில் செல்போன் சேவையை அளித்து வரும் லைக்கா மொபைல்ஸ் நிறுவனத்தின் ஒரு அங்கம் என்றும் அதன் உரிமையாளர் சுபாஷ்கரன் அல்லி ராஜா ராஜபக்ஷேவின் நெருங்கிய கூட்டாளி என்றும் திடுக்கும் தகவல் வெளியானது.
நாம் கூட அது தொடர்பான செய்திகளை சில தினங்களுக்கு முன்பு ஆதாரப்பூர்வமாக வெளியிட்டிருந்தோம். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட உலகத் தமிழர்கள் கொதித்துப் போய் கத்தி படத்தை புறக்கணிக்கும் வேலைகளில் இறங்கியுள்ளனர்.
இதனால் பதறிப்போன லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஐயங்கரன் கருணாமூர்த்தி சில குறிப்பிட்ட நாளிதழ்களின் நிருபர்களை மட்டும் கூப்பிட்டு நேற்று அவசரம் அவசரமாக ஒரு பிரஸ்மீட் வைத்தார்.
அப்போது அவர் இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுக்கும் லைக்கா மொபைல்ஸ் நிறுவனத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று வாய் கூசாமல் பொய் சொன்னார். இலங்கையில் லைக்கா மொபைல்ஸ் நிறுவனம் அங்குள்ள தமிழர்களுக்கு செய்த சில நல்ல விஷயங்களை மட்டும் பிரஸ் ரிலீஸில் பட்டியலிட்டிருந்தார்.
ராஜபக்ஷேவின் பேராதரவுடன்தான் லைக்கா மொபைல் நிறுவனம், லண்டன் – கொழும்புவுக்கு லைக்கா ப்ளை விமான சேவையை நடத்தி வருகிறது. மேலும் ராஜபக்ஷேவின் மிக நெருங்கிய உறவினர் ஒருவர் லைக்கா மொபைல் நிறுவனத்தில் பெருமளவு பங்குதாரராக இருப்பதை மீடியாக்கள் அம்பலப்படுத்தியுள்ளன. லைக்கா ப்ளை நிறுவனம்தான் இலங்கையின் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் தெரிவு செய்யப்பட்ட கூட்டாளி நிறுவனமாகும். இந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் தலைமைப் பொறுப்பிலிருப்பவர் ராஜபக்சேவின் நெருங்கிய உறவினர்!
அதுமட்டுமல்ல, கடந்த 2011-ம் ஆண்டு இங்கிலாந்தின் டோரி கட்சிக்கு 420,000 பவுண்டுகளை நன்கொடையாக அளித்திருந்தது லைக்கா மொபைல் நிறுவனம். இது பெரிய சர்ச்சையைக் கிளப்பியது. ராஜபக்ஷேவுக்கும், இலங்கை அரசுக்கும் நெருக்கமான லைக்காமொபைல் நிறுவனத்திடமிருந்து எதற்காக இவ்வளவு பெரிய தொகையை இங்கிலாந்தின் ஆளும்கட்சி பெற வேண்டும்? என அந்நாட்டு எம்பி டாம் ப்ளெங்கின்ஸாப் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் பதிலளித்த பிரதமர் டேவிட் கேமரூன், இந்த நன்கொடையை திருப்பித் தரப் போவதாக அறிவித்ததோடு, லைக்கா மொபைலுக்கும் ராஜபக்சேவுக்குமான தொடர்புகளை விசாரிக்க குழு அமைக்கவும் உத்தரவிட்டது நினைவிருக்கலாம். அதுமட்டுமல்ல, இலங்கையில் கடந்த ஆண்டு நடந்த காமன்வெல்த் மாநாட்டுக்கு முதன்மை ஸ்பான்சராக இருந்தது இந்த லைக்காமொபைல் நிறுவனம்தான். இந்த நிறுவனத்துக்கு ‘கோல்ட் ஸ்பான்சர்’ எனும் பெரிய அந்தஸ்தை இலங்கை அரசு கொடுத்திருந்தது.
ராஜபக்ஷேவின் உச்சக்கட்ட சர்வாதிகாரம் கொடிகட்டிப் பறக்கும் இலங்கையில் அவரது முழுமையான ஆதரவு இல்லாமல் ஒரு தமிழரால் இத்தனை செல்வாக்குடன் அங்கு இயங்க முடியுமா? சர்வதேச அளவில் மிக சக்தி வாய்ந்த ஒரு நாட்டின் பிரதமரே லைக்காமொபைல் – ராஜபக்சே நிதித் தொடர்புகள் என்ன? என்ற கேள்வியை நாடாளுமன்றத்தில் எழுப்பிய பிறகும், ராஜபக்ஷேவுக்கும் லைக்காவுக்கும் சம்பந்தமே இல்லை என இதுவரை தான் தயாரித்த எந்த ஒரு படத்தின் பிரஸ்மீட்டிலும் பேசாத கருணாமூர்த்தி சென்னையில் பிரஸ் மீட் வைத்து சொல்கிறார். அப்படியென்றால் தமிழ்ப் பத்திரிகைகள் அந்த அளவு விவரம் தெரியாதவர்கள் என நினைத்துக் கொண்டார்களா என்ன?
ஆனால் இலங்கை அதிபருக்கும் லைக்கா மொபைல்ஸ் நிறுவனத்துக்கும் எந்தெந்த வகையில் தொடர்புகள் உள்ளது என்பது உலகம் முழுக்க வாழும் ஈழத்தமிழர்களுக்கு முழுமையாகத் தெரியும் என்பதால் ‘கத்தி’ படம் கண்டிப்பாக ரிலீஸ் நேரத்தில் கடும் விளைவுகளை சந்திக்கும் என்பது மட்டும் உறுதி.

















