2013ஆம் ஆண்டில் இலங்கையில் மனித உரிமைகள் விவகாரம் கவலை தரும் விதத்திலேயே அமைந்திருந்தது என்று பிரிட்டனின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய விவகார அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கை சாடியிருக்கின்றது.
சர்வதேச அரங்கில் மனித உரிமைகளை மேம்படுத்தும் நோக்கில் வருடாந்தம் வெளியிடப்படும் இந்த அறிக்கையில், அக்கறைக்குரிய நாடு சிறிலங்கா என்ற தலைப்பில் இலங்கையில் 2013ஆம் ஆண்டு இடம்பெற்ற மீறல்கள் குறித்து தெளிவாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
“”வடக்கில் தேர்தலை நடத்தியமை, உட்கட்டுமானங்களை மீள உருவாக்குதல் போன்று போருக்குப் பின்னரான விவகாரங்களில் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வந்தாலும் பல விடயங்களிலும் ஒட்டு மொத்தப் பார்வையானது பாதகமானதாகவே இருக்கிறது. பத்திரிகையாளர்களுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்கின்றன” என்று அறிக்கை கூறுகின்றது.
சுமார் 7 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கை, இலங்கையில் இடம்பெற்றவற்றைப் பட்டியலிட்டுள்ளது. தேர்தல்கள், பேசுவதற்கும் ஒன்று கூடுவதற்குமான சுதந்திரம், மனித உரிமைகள் பாதுகாவலர், நீதியையும் சட்டத்தின் ஆட்சியையும் நிலைநாட்டுவதற்கான நடைமுறை, சாவுத் தண்டனை, சித்திரவதை, பொதுமக்களின் பாதுகாப்பும் முரண்பாடும், மதச் சுதந்திரம் அல்லது நம்பிக்கைகளின் சுதந்திரம், பெண்களின் சுதந்திரம்,சிறுபான்மையினரின் நம்பிக்கை, குழந்தைகள் நலன் ஆகிய தலைப்புகளின் கீழ் அறிக்கையிடப்பட்டுள்ளது.
போர்க் குற்றங்களுக்குப் பொறுப்புக் கூறுதல், மனித உரிமைகளை மதித்தல் மற்றும் அரசியல் தீர்வு ஒன்றைக் கட்டியெழுப்புதல் என்பன முக்கியமானவை என்றும் அந்த அறிக்கை கூறுகின்றது.

















