பிரி. நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கைப் பயணத்தை நிறுத்தினர்

channel4இலங்கைக்கு வரவிருந்த பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பயணம் இறுதி நேரத்தில் ரத்துச்செய்யப்பட்டுள்ளது என்று சனல் 4 ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளதுடன், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற் பந்து வீச்சாளர் முரளிதரனின் நிதியுதவியிலே இந்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன என்று சுட்டிக்காட்டியுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் சபையில் பிரேரணை நிறைவேற்றப்பட்டு இரண்டு வாரங்களினுள் இந்தப் பயணஏற்பாடு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. அதில் பிரிட்டனின் 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கெடுக்க திட்டமிட்டிருந்தனர். இவர்கள் இலங்கைக்கு வருகை தந்து இலங்கை அரசதரப்பு பிரதிநிதிகளுடன் குறிப்பாக, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­சவையும் சந்திக்க திட்டமிட்டிருந்தனர். இருப்பினும் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரிட்டனிலுள்ள இலங்கைக்கான அனைத்து நாடாளுமன்ற குழுவிடம் இந்தப் பயணத் திட்டம் குறித்து எதுவுமே தெரிவித்திருக்கவில்லை. இந்தநிலையில் பயணம் செய்யத் திட்டமிட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குள்ளும் இறுதி நேரத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இதனால் பயணம் செய்வதற்கு 11 மணி நேரத்துக்கு முன்னதாகத் திட்டத்தை அவர்கள் ரத்துச் செய்துள்ளனர். இந்தப் பயணத்துக்கான நிதி உதவிகள் யாவும், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனால் உருவாக்கப்பட்ட தொண்டு நிறுவனம் ஒன்றினாலே வழங்கப்பட்டிருந்தது என்றும், முத்தையா முரளிதரன் இலங்கை அரசுக்கு ஆதரவாகச் செயற்படுவதால் விமர்சனங்களுக்குள் உள்ளான ஒருவர் என்றும் சனல் 4 தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

Tags: , ,

Leave a Reply