இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அக்னி – ஐ ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது.
.ஒடிஸா மாநிலம் பாலாசூர் அருகே வீலர் தீவில் இருந்து நேற்றிரவு இந்தச் சோதனையை இந்திய ராணுவம் மேற்கொண்டது. முதன்முறையாக இரவில் மேற்கொண்ட ஏவகனை பரிசோதனை இதுவாகும்.
தரையில் இருந்து பாய்ந்து சென்று தரையில் 700 கி.மீ. தொலைவு வரை உள்ள எதிரிகளின் இலக்கைத் தாக்கும் அணு ஆயுத வல்லமை கொண்ட அக்னி – ஐ ஏவுகணை, நேற்றிரவு 11.10 மணி அளவில், வாகனம் ஒன்றில் இருந்து ஏவப்பட்டது.
இந்தச் சோதனை அனைத்து வழிவகைகளிலும் வெற்றிகரமாக இலக்கை எட்டியதாக பாதுகாப்பு ஆய்வு மற்றும் வளர்ச்சி அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ரவிகுமார் குப்தா தெரிவித்துள்ளார்.
எந்தவித பாதுகாப்பு அச்சுறுத்தலையும் சமாளிக்கும் வகையில் ராணுவம் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்யும் வகையில், இரவு நேரத்தில் இந்தச் சோதனை முதன்முறையாக நடத்தப்பட்டுள்ளது.
இந்தச் சோதனையை, இந்திய ராணுவத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சிறப்பு உத்திசார் அதிரடிப் படையினர், பயன்பாட்டு நோக்கில் நடத்தியதாக வீலர் தீவில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைத் திட்டத்தின் இயக்குநர் எம்.வி.கே.வி. பிரசாத் தெரிவித்தார்.
ஏற்கெனவே கடந்த பெப்ரவரி மற்றும் 19 ஆகிய திகதிகளில் இந்தச் சோதனை இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது. 1,000 கிலோ அணு குண்டு அல்லது வெடிபொருளை சுமந்து சென்று தாக்கும் வல்லமை கொண்ட இந்த அக்னி ஏவுகணை ஏற்கெனவே இந்திய ராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
















