விஷால், லட்சுமி மேனன் நடிப்பில் வெளியான பாண்டிய நாடு ஹிட் ஆனதால் மீண்டும் அதே ஜோடி இந்த படத்தில் ஜோடி சேர்ந்துள்ளார்கள். பாண்டிய நாட்டில் கிடைத்த வெற்றி சிகப்பு மனிதனில் கிடைக்குமா? என்று படத்தின் விமர்சனத்தை பார்க்கும் முன்பு, Narcolepsy என்றால் என்ன என்பது குறித்து சிறிது பார்ப்போம்.
Narcolepsy என்பது ஒருலட்சம் பேருக்கு ஒருவருக்கு மட்டும் வரும் ஒரு அரியவகை நோய். இந்த நோய் தாக்கியவர்கள் திடீர் திடீரென தூங்கிவிடுவார்களாம். அதாவது அதிகமாக சந்தோஷம் அடைந்தாலோ, அல்லது அதிகமாக துக்கமடைந்தாலோ உடனே தூங்கிவிடுவார்களாம். அதிர்ச்சியான செய்தியை கேட்டால் நாமெல்லாம் மயக்கம் அடைந்துவிடுவோம். ஆனால் இந்த நோய் உள்ளவர்கள் தூங்கிவிடுவார்கள். ஆனால் மழையிலோ அல்லது தண்ணீரிலோ இருந்தால் இந்த வியாதி இவர்களை தாக்காதாம்.
இப்படி ஒரு நோயினால் தாக்கப்பட்டவர்தான் ஹீரோ விஷால். முதலில் நண்பர்களாக பழகும் விஷால்-லட்சுமி மேனன், தமிழ் பட வழக்கப்படி காதலர்களாக மாறுகின்றனர். ஆனால் இவர்களின் காதலை லட்சுமி மேனனின் தந்தை ஒப்புக்கொள்ளவில்லை. காரணம் இந்த நோய் தாக்கியவர்கள் அப்பாவாக ஆகமுடியாது என்று அவர் எதிர்க்கின்றார். ஆனால் லட்சுமி மேனன் இந்த பிரச்சனைக்கு ஒரு புதிய தீர்வை யோசிக்கின்றார். அதாவது விஷாலை நீச்சல் குளத்திற்குள் இழுத்து சென்று விஷாலுடன் ஒன்றுசேர்ந்து விடுகிறார்.
இந்நிலையில் லட்சுமி மேனனை அடையாளம் தெரியாத நான்கு பேர் பலாத்காரம் செய்துவிட, அந்த நேரத்தில் விஷாலை Narcolepsy நோய் தாக்கி தூங்கிவிடுவதால், அவரால் லட்சுமி மேனனை காப்பாற்ற முடியாமல் போய்விடுகிறது. லட்சுமி மேனன் கோமா நிலைக்கு சென்றுவிடுகிறார். காதலியை பலாத்காரம் செய்த நான்கு பேர்களை விஷால் எப்படி பழிவாங்குகிறார் என்பதுதான் இரண்டாவது பாதி கதை.
இரண்டாவது பாதியில் தேவையில்லாமல் வில்லனின் பிளாஷ்பேக். அதில் தேவையில்லாமல் ஒரு அருவருப்பான கிளைக்கதை. முதல் பாதி எந்த அளவுக்கு விறுவிறுப்பாக இருந்ததோ, அந்த அளவுக்கு இரண்டாவது பாதியை மொக்கையாக்கிய பெருமை இயக்குனர் திருவுக்கு சேரும். முதல் பாதியில் முந்தைய படம் சமர் போல செம விறுவிறுப்பாக செல்கிறது. இரண்டாவது பாதியிலும் அதே கவனத்தை செலுத்தியிருந்தால் விஷாலுக்கு மீண்டும் ஒரு திமிறு, சண்டைக்கோழி மாதிரியான வெற்றிப்படமாக இது அமைந்திருக்கும்.
விஷாலின் தூங்கி வழிந்த முகம், கேரக்டருக்கு மிக பொருத்தமாக இருக்கிறது. Narcolepsy நோய் தாக்கியதால் சின்ன சின்ன ஆசைகளை பூர்த்தி செய்ய முடியாமல் தவிக்கும் உணர்வை மிக அழகாக வெளிப்படுத்துகிறார். காதல் காட்சியில் மட்டும் வழிகிறார்.
லட்சுமி மேனன் இடைவேளை வரைதான் வருகிறார். விஷால் அவ்வப்போது தூங்குவது போல, லட்சுமி மேனன் இடைவேளைக்கு பின்னர் மொத்தமாக கோமா என்ற பெயரில் தூங்கிவிடுவதால் அவருக்கு முதல் பாதியில் மட்டும்தான் வேலை. ஆனாலும் கொடுத்த வேலை திருப்தியாக செய்துள்ளார்.
ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும்படியாக இருக்கிறது. பின்னணி இசையில் அமர்க்களப்படுத்துகிறார்.
ஒளிப்பதிவு, எடிட்டிங் ஆகிய இரண்டுமே இந்த படத்தின் இரண்டு கண்கள் போல. இருவருமே அற்புதமாக தங்கள் பணியை செய்திருக்கிறார்கள்.
இயக்குனர் திரு இரண்டாவது பாதியில் அருவருப்பான பிளாஷ்பேக்கை தவிர்த்திருக்கலாம். இப்பொழுதும் ஒன்றும் கெட்டுப்போகவில்லை. பிளாஷ்பேக்கை படத்தில் இருந்து தூக்கிவிட்டால் நன்றாக இருக்கும். செய்வாரா?
















