இலங்கை அரசாங்கமும் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகமும் இணைந்து 2009ம் ஆண்டு வெளியிட்ட கூட்டறிக்கையில் வழங்கிய உறுதிமொழிகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் ஐ.நா கோரிக்கை விடுத்துள்ளது.
ஜெனிவாவில் மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை செயற்படுத்த இலங்கை ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அலுவலகத்துடன் ஆக்கபூர்வமான ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும் என ஐ.நா பேச்சாளர் இரி கெனிகோ வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பில் ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அலுவலகம் மேற்கொள்ளவிருக்கும் விசாரணை குறித்து இலங்கையின் பல அறிக்கைகள் பற்றி கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஜெனிவா தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் வரவேற்கவில்லை என அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் வெளியிட்டிருந்த அறிக்கையையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதாபிமான சட்டங்களை மீறிய சம்பவங்கள் தொடர்பில் பதிலளிக்கும் பொறுப்புக் கூறும் ஒரு செயற்பட்டின் முக்கியத்துவம் குறித்து ஐ.நா செயலாளர் கோடிட்டு காட்டியுள்ளார்.
இலங்கையில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும், பொறுப்புக் கூறலையும் நீடித்த சமாதானத்தையும் ஊக்குவிக்க மனித உரிமை ஆணையாளர் மேற்கொண்டுள்ள உறுதியான நடவடிக்கை வரவேற்கின்றோம்.
இலங்கையில் நீடித்த அரசியல் தீர்வு, பொறுப்புக் கூறல் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளில் ஈடுபட ஐ.நா இலங்கைக்கு ஆதரவு வழங்கும் எனவும் ஐ.நா பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
















