புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் தடை செய்யப்பட்டமை புத்திசாதூரியமான தீர்மானமன்று – ராஜீவ விஜேசிங்க

rajeeva-wijaysigheபுலம்பெயர் தமிழ் அமைப்புக்களை தடை செய்வதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானம் புத்திசாதூரியமான தீர்மானமாகாது என ஆளும் கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ராஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார்.புலம்பெயர் தமிழ் அமைப்புக்களை தடை செய்வதனால் ஏற்படக் கூடிய எதிர்விளைவுகளை கருத்திற் கொள்ளாது அரசாங்கம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

எமது நாட்டின் தீர்மானம் நிறைவேற்றும் அதிகாரமுடையோரிடம், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது தொடர்பிலான ஆர்வம் வெகு வரையறுக்கப்பட்டுள்ள அளவிலேயே காணப்படுவதாக தாம் உணர்வதாகத் தெரிவித்துள்ளார்.புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் சாதகமான முறையில் செயற்பட்ட சந்தர்ப்பங்களை நாம் உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ளவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெளிவிவகார அமைச்சு நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த எவ்வித முயற்சியையும் எடுக்கவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகளுக்கு அமைய புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுடன் சுமூக உறவுகளைப் பேண வெளிவிவகார அமைச்சு முனைப்புக் காட்டத் தவறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.மிதவாத கொள்கைகளைப் பின்பற்றும் தமிழர்களையும் சந்தேக கண்கொண்டு பார்ப்பதனால் நன்மைகள் ஏற்படப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தன்னார்வ தொண்டு நிறுவனங்களை நெருக்குதல்களுக்கு உள்ளாக்க முயற்சிப்பது உசிதமான நடவடிக்கையாக அமையாது என அவர் தெரிவித்துள்ளார்.புலம்பெயர் தமிழ் சமூகம் தொடர்பில் முரண்பட்ட கொள்கைகளை பின்பற்றுவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல எனஅவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Tags: , ,

Leave a Reply