வடக்கில் தொடர்ந்தும் இராணுவத்தை நிலை நிறுத்தும் அரசின் முடிவு சரியானது தான் என்று கோபி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளமை மூலம் உறுதியாகியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் மீள ஒருங்கிணைவது மற்றும் கோபி சுட்டுக் கொல்லப்பட்டமை தொடர்பில் சர்வதேச இராஜதந்திரிகளுக்கு விளக்கமளிக்கப்படவுள்ளது என ஜனாதிபதியின் மனித உரிமைகளுக்கான விசேட பிரதிநிதி மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
கண்டிக்குச் சென்று அங்கு பெளத்த மத பீடாதிபதிகளைச் சந்தித்த பின்னர் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது:
வடக்கில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீள ஒருங்கிணைந்து வருகின்றார்கள் என்ற அறிக்கை எமக்குக் கிடைத்துள்ளது. எனவே வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்ற முடியாது என்று நாம் ஜெனிவாவில் இந்த ஆண்டு இடம்பெற்ற மனித உரிமைகள் அமர்வில் தெரிவித்திருந்தோம். நாட்டின் தேசிய பாதுகாப்புக் கருதி வடக்கிலிருந்து படைகளை அகற்ற முடியாது என்று திட்டவட்டமாகவே குறிப்பிட்டிருந்தோம்.
நாம் எடுத்த முடிவு சரியானதே. தமிழீழ விடுதலைப் புலிகள் மீள ஒருங்கிணைகின்றார்கள் என்று ஐ.நாவில் நாம் குறிப்பிட்டதும் உண்மையென்பது கோபி சுட்டுக் கொல்லப்பட்டதன் ஊடாக உண்மையாகியுள்ளது. எமது இந்த முடிவு தொடர்பில் நாம் சர்வதேச சமூகத்துக்குத் தெளிவுபடுத்துவோம். மேலும் தமிழீழ விடுதலைப் புலிகள் மீள உருவாகின்றமை மற்றும் கோபி சுட்டுக் கொல்லப்பட்டமை தொடர்பில் சர்வதேச இராஜதந்திரிகளுக்கு தெளிவுபடுத்தப்படவுள்ளது என்றார்.
















