ஜெனிவாவில் அமெரிக்காவால் பிரேரிக்கப்பட்டு 23 வாக்குகளால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீது இந்தியா சாதகமாக வாக்களிக்காமல் போனமை எந்த வகையில் பார்த்தாலும் தனது மூலோபாய பங்காளியான அமெரிக்காவின்
முகத்தில் அறையப்பட்ட ஒரு செயல் தான் என்று எச்.எல்.டி. மஹிந்தபால என்ற கட்டுரையாளர் வர்ணித்துள்ளார்.
இந்தியாவின் செயற்பாடு தொடர்பாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்திய அரசில் அங்கம் வகிப்பவர்களே உதாரணமாக, அமைச்சர் சிதம்பரம் உட்படப் பலர் இந்தச் செயலை ஆதரிக்கவில்லை. இந்திய அமைச்சரவையில் அப்படியான ஒரு முடிவு எடுக்கப்பட்டிருக்கவில்லையென்று அவர் கூறியுள்ளார்.
தமிழ் நாட்டில், முதலமைச்சர் ஜெயலலிதா, தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி போன்றவர்கள் மத்திய அரசின் இந்த நடவடிக்கையைக் கடுமையாகக் கண்டித்திருக்கும் நிலையில், காங்கிரஸ் தலைவர்களான ஞான தேசிகன், சுதர்சனம் நாச்சியப்பன் போன்றவர்கள் அது, இந்தியாவின் ராஜதந்திர நடவடிக்கை என்று சப்பைக் கட்டு கட்டியிருக்கிறார்கள்.
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை ஒன்று முன்னெடுக்கப்படுமானால், இந்திய அமைதி காக்கும் படைகள் இலங்கையில் மேற்கொண்டிருந்த போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரணையும் உள்ளடக்கப்பட வேண்டும் என்று இலங்கை தரப்பில் வலியுறுத்தப்படும் என்ற அச்சம் காரணமாகவும் இந்தியா இந்த நிலைப்பாட்டை எடுத்திருக்கலாம் என்றும் சிலர் விமர்சிக்கிறார்கள்.
அதைவிட அமெரிக்கா, இந்தியாவின் துணைத் தூதுவர் தேவயானி கொப்ர கடே விடயத்தில் அவரை நடத்திய முறை குறித்து இந்தியா அதிருப்தி கொண்டிருந்தமையும், இந்தியாவில் இருந்த அமெரிக்க தூதுவர் இப்போது தேர்தலில் அடுத்த பிரதமராக வரக் கூடும் என்று கருதப்படும் பா.ஜ.கட்சி யின் வேட்பாளர் நரேந்திரமோடியைச் சந்தித்துப் பேசியிருந்தமையும் காங்கிரஸ் அரசுக்கு ஆத்திரத்தை மூட்டியிருக்கலாம் என்றும் கூடப் பேசப்படுகின்றது.
இலங்கை இந்தியாவின் அண்டை நாடாக இருந்த போதிலும், ஒரு போதும் இந்தியாவுடன் இணங்கிப் போனதில்லை. இந்திய அரசமைப்புக்கும் இலங்கை அரசமைப்புக்கும் இடையிலேயே பலத்த வேறுபாடுகள் உண்டு.
அங்கே பல்வேறு இனங்கள், மொழிகள் கலாசாரங்கள் ஏன், மாநிலங்கள் கூட இருக்கின்றன. அங்கு வாழும் எந்த ஒரு மனிதனும் மக்கள் ஆதரவு பெற்று மத்தியில் பிரதமராகவோ, ஜனாதிபதி யாகவோ பதவி ஏற்க முடியும்.
இலங்கையில் ஒரு போதும் அவ்வாறு எதுவும் நடைபெறமுடியாது. சிறுபான்மையோர், பொரும்பான்மையினர் விரும்பினால் அன்றி எந்த ஒரு முக்கிய பதவியிலும் அமர முடியாது.
அந்த வகையிலேயே அரசமைப்பு இருக்கின்றது. பெரும்பான்மை மக்களின் மனங்களும் அவ்வாறே பயிற்றப்பட்டுள்ளன. இவை ஒரு புறமிருக்க,இலங்கை விவகாரங்களில் இந்திய அரசுக்கும், மக்களுக்கும் அதிக அக்கறை இருப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. இந்திய மாநிலங்களில் ஒன்றான தமிழ் நாட்டுடன் இனம், சமயம், மொழி, கலாசாரம் முதலிய காரணங்களினால் மிக நெருக்கமான உறவைக் கொண்ட ஒரு மக்கள் சமுதாயம் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தின் சில பகுதிகளில் செறிந்து வாழ்கின்றது.
குறிப்பிட்ட அளவிலானவர்கள் ஏனைய பகுதிகளிலும் வாழ்கிறார்கள். இவர்களின் அரசியல், நில உடைமை மற்றும் சமய கலாசாரங்கள் அச்சுறுத்தப்படுவதும், ஆக்கிரமிக்கப்படுவதும் இந்திய பெருநிலத்திலும் குறிப்பாக, தமிழ் நாட்டில் எதிரொலிக்கவே செய்கின்றன. அதனால் மத்திய அரசும் அதில் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது.
இந்தக் கட்டாய நிலைமையை இந்திய மத்திய அரசு தனது ராஜரீக செயற்பாடுகளுக்கு பயன்படுத்திக் கொள்வதின் விளைவே கடந்த காலங்களில் பலவிதமான சிக்கல்களுக்கு வழிவகுத்தன.
எதுவானாலும், இப்போது இந்திய அரசு எடுத்துள்ள நிலைப்பாடானது இலங்கையிலுள்ள தமிழர்களுக்கு எந்த அளவில் பயன் அளிப்பதாக இருக்கும் என்று இப்போதைக்குச் சொல்ல முடியாது.
இலங்கை அரசு மீது சர்வதேச மட்டத்தில் அழுத்தம் ஒன்று ஏற்படுத்துவதற்கு ஜெனிவாத் தீர்மானம் உதவியாக இருக்கும் என்று தமிழ்த் தரப்பினர் அனைவரும் எதிர்பார்த்திருந்த வேளையில், இந்தியா ஏற்கெனவே இரண்டு முறை இலங்கைக்கு எதிரான தீர்மானங்களை ஆதரித் திருந்தும் கூட இம்முறை கடைசி வரை தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தாமல் இருந்து விட்டு, வாக்கெடுப்பின் போது அதில் கலந்து கொள்ளாமல் இருந்து விட்டது.
உண்மையில், இருக்கும் நிலைமைகளைப் பார்க்கும் போது, இந்தச் செய்கையின் மூலம் இந்தியா எதனை எதிர்பார்க்கிறது என்பது விளங்குகின்றது. இலங்கைக்கு இந்தியாவின் இந்தச் செய்கை மகிழ்ச்சியை அளித்திருப்பது ஒரு புறமிருக்க, எதிர்காலத்தில் இந்திய விருப்பங்களை இவர்கள் நிறைவேற்றுவார்கள் என்று எதிர்பார்ப்பது எந்த அளவில் சாத்தியமாகும் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
ஏற்கெனவே பல வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டுள்ள இலங்கைத் தலைவர்கள், இந்தியாவின் இந்தச் செய்கையை ஒரு நல்லெண்ணச் சமிக்ஞையாக மட்டுமன்றி எதிர்காலத்தில் சர்வதேச பிரச்சினைகளை எதிர்கொள்ளும் போது இந்தியாவைத் தம் பக்கம் வைத்துக்கொள்ள முடியும் என்று எண்ணிச் செயற்படுவார்களா என்பதும் இனிமேல் தான் தெரியவரும்.
இந்தியாவின் செயற்பாடு உண்மையில் ஒரு ராஜதந்திர நடவடிக்கைதானா என்பதும் அதன் மூலம் வெளிப்படும். அவ்வாறானால், இலங்கை அரசின், குறிப்பாக மஹிந்த ராஜபக்ச அரசின் தமிழர் தொடர்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பான ஏன் வடக்கு மாகாண சபை தொடர்பான கொள்கைகளும் கூட மாறலாம். அவ்வாறாயின் இந்த நாட்டில் இனங்களுக்கிடையிலும், மதங்கள், கலாசாரங்களுக்கிடையிலும் புதியதொரு நல்லிணக்கம் உருவாகமுடியும் நடக்குமா? இல்லையேல் இந்தியாவின் ராஜதந்திரம் அம்மட்டோடு போய் விடுமா?
















