இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ் மனைவி கேத் மிடில்டனுடன் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் தற்போது சுற்றுப்பயணம் செய்து வருகின்றனர். இந்த சுற்றுப்பயணத்தின்போது தங்களுக்கு இரண்டாவது குழந்தை பிறக்கவிருப்பதை சூசகமாக தெரிவித்துள்ளனர்.
இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ்-கேத் மிடில்டன் தம்பதியினருக்கு ஜார்ஜ் என்ற எட்டுமாத குழந்தை உள்ளது. இந்த குழந்தை தற்போது மன்னர் குடும்பத்தின் மூன்றாவது வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது நியூசிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்துவரும் வில்லியம்ஸ் தம்பதியினர் நேற்று அதிகாலை வாக்கிங் சென்றுகொண்டிருந்தபோது, சிந்தியா ரீட் என்ற பெண்ணை சந்தித்தனர். அவர் குட்டி இளவரசர் ஜார்ஜுக்கு ஒரு கம்பளி சால்வை பரிசாக அளித்தார். அதை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்ட கேத் மிடில்டன், அந்த பெண்ணிடம் நீங்கள் கூடியவிரைவில் இன்னும் ஒரு சால்வை எங்களுக்கு தரவேண்டியிருக்கும் என்று கூறினார். இதிலிருந்து கேத் மிடில்டன் மீண்டும் கர்ப்பமாக இருப்பதை சூசகமாக தெரிவித்துள்ளார் என கூறப்படுகிறது.
மேலும் நேற்று மாலை ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கேத் மிடில்டன் அடிக்கடி தண்ணீர் குடித்ததாகவும் கூறப்படுகிறது. ஆனாலும் கேத் மிடில்டன் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதை மன்னர் குடும்பம் முறைப்படி இன்னும் அறிவிக்கவில்லை.
















