சித்திரை புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது, திடீர் விபத்துக்கள் காரணமாக படுகாயமடைந்த 206 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது கடந்த வருடத்தோடு ஒப்பிடுகையில், மிக குறைந்த தொகை என்று தேசிய மருத்துவ மனையில் திடீர் விபத்து பிரிவினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.
பட்டாசு மற்றும் வானவேடிக்கை கொளுத்தியதாலேயே அதிக தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன.
இதேவேளை, யாழ்ப்பாணம் நாவலர் வீதியின் ஐந்து சந்தி பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நேற்று கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மூன்று லட்சம் ரூபா பெறுமதியான கணனி, தொலைக்காட்சி பெட்டி உட்பட பல பொருட்கள் கொள்ளையிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கொள்ளை குறித்த விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அதேவேளை, பூண்டுலோயா கீறின்வத்தை பிரதேச ஆலயத்தில் நேற்றிரவு வழங்கப்பட்ட அன்னதானத்தின் போது உணவு ஒவ்வாமை காரணமாக 50 பேர் பாதிக்கப்பட்டனர்.
அவர்கள் கொத்மலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளனர்.
மேலும், இன்று காலை 6 மணியளவில் அளவ்வை ஆற்றிலிருந்து ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இவர் வரக்காபொல மாயின்ஒலுவ பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடையவர் என பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டு;ள்ளார்.
அளவ்வை பகுதிக்கு இசை நிகழ்ச்சியொன்று சென்ற நிலையில், வீடு திரும்பாத காரணத்தால் நடத்தப்பட்ட தேடுதலின் போது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, கம்பளை வெலிகந்தை பிரதேசத்தில் இரு குழுக்களுக்கு இடையே இடம்பெற்ற மோதலில் 3 பேர் குருந்துவத்தை மருத்துவமனையிலும், 2 பேர் கம்பளை மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
















