கள்ளக்காதலை கண்டித்த கணவரை மனைவி அடித்துக்கொலை!

loversகள்ளக்காதலை கண்டித்த கணவரை அடித்துக் கொலை செய்த மனைவி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். கள்ளக்காதலனை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கள்ளக்காதல்

தானே, வசாய் பாப்டி கிராமத்தை சேர்ந்தவர் அபு தஹிர் சேக்(வயது32). கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி யாசிம் தாரா(30). இவருக்கும், அந்த பகுதியை சேர்ந்த பிரதீப்குமார் என்ற வாலிபருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

இதையடுத்து அபு தஹிர் சேக் வேலைக்கு சென்ற பின்னர் இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர். சமீபத்தில் மனைவியின் கள்ளக்காதல் அபு தஹிர் சேக்கிற்கு தெரியவந்தது. இதனையடுத்து அவர் மனைவியை கண்டித்தார். ஆனால் யாசிம் தாரா, பிரதீப்குமாருடன் பழகுவதை நிறுத்தவில்லை.

மேலும் கள்ளக்காதல் கணவருக்கு தெரிந்து விட்டதால் யாசிம் தாராவும், பிரதீப்குமாரும் அபு தஹிர் சேக்கை கொலை செய்ய திட்டமிட்டனர். இதற்கு உடந்தையாக யாசிம் தாரா தனது உறவுக்கார பெண் ஒருவரையும் அழைத்துக் கொண்டார்.

அடித்துக்கொலை

சம்பவத்தன்று இரவு 2 பேரும் அபு தஹிர் சேக்கை அந்த பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஒரு கட்டிடத்திற்கு நைசாக பேசி அழைத்துச் சென்றனர். அங்கு ஏற்கனவே பிரதீப்குமார் கையில் உருட்டுக்கட்டைகளுடன் தயாராக காத்துக் கொண்டிருந்தார். அபு தஹிர் கட்டிடத்திற்குள் சென்றதும் பிரதீப்குமார், யாசிம் தாரா, உறவுக்கார பெண் 3 பேரும் சேர்ந்து உருட்டுக்கட்டையால் அபு தஹிர் சேக்கை சரமாரியாக தாக்கினார்கள். இதில் வேதனை தாங்க முடியாமல் அபு தஹிர் சேக் அலறி துடித்தார். அவரது சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர்.

உடனே 3 பேரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். அப்போது, யாசிம் தாராவும், அவரது உறவுக்கார பெண்ணும் பொதுமக்களிடம் சிக்கிக்கொண்டனர். பிரதீப்குமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

2 பெண்கள் கைது

இதற்கிடையே ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்த அபு தஹிர் சேக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த வசாய்காவ் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பொதுமக்கள் யாசிம் தாராவையும், அவரது உறவுக்கார பெண்ணையும் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய பிரதீப்குமாரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Tags: , ,

Leave a Reply