நரேந்திர மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பே ஐ.ஐ.எம். (அகமதாபாத்), என்.ஐ.டி. (நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டிசைன்), ஐ.ஆர்.எம்.ஏ. (இன்ஸ்டிட்யூட் ஆஃப் ரூரல் மேனேஜ்மென்ட் – ஆனந்த்) போன்ற புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள் குஜராத்தில் செயல்பட்டு வருகின்றன. மோடி ஆட்சிக்கு வந்த பிறகு இங்கே புதிதாக 30 பல்கலைக்கழகங்கள் வந்திருக்கின்றன. ஆனால், இவை அனைத்துமே தனியார் பல்கலைக்கழகங்கள். இவற்றில் கட்டணங்கள் அதிகம். அதேபோல தனியார் பள்ளிகள் தங்களின் விருப்பம்போல கட்டணம் வசூலித்துக்கொள்ளலாம் என்பதால் பிள்ளைகளைப் பெற்றவர்களின் பாடு இங்கே திண்டாட்டம்தான்.
தனியார் கல்வி நிறுவனங்களின் நிலையைவிட அரசு கல்விக்கூடங்களின் நிலைமை படுமோசம். மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் கல்விக்காக நிதியை ஒதுக்குவதில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு என்ற வரிசையில் 13 மாநிலங்களுக்கு அடுத்தப்படியாகத்தான் குஜராத் இருக்கிறது. முறையான முழு நேர ஆசிரியர்களை கல்விக்கூடங்களுக்கு நியமிப்பதற்கு பதிலாக, வித்யா சஹாயக்ஸ், சிக்ஷான் சஹாயக்ஸ், அத்யாபக் சஹாயக்ஸ் என்ற பெயர்களில் அடிமாட்டு சம்பளத்துக்கு ஒப்பந்த ஊழியர்களை வேலைக்கு அமர்த்துகிறது அரசு. அரசே இப்படி சகாய விலைக்கு ஆசிரியர்களை நியமித்தால், அரசு உதவிபெறும் பள்ளிகளும் தனியார் பள்ளிகளும் தங்களின் ஆசிரியர்களை எப்படி நடத்தும் என்பதை சுலபமாக யூகித்துவிட முடியும்.
இன்றைய நிலையில் 270 கல்லூரிகளில், கல்லூரி முதல்வர் பதவி நிரப்பப்படாமல் இருக்கிறது. 45 சதவிகித பேராசிரியர்கள் மற்றும் உதவிப் பேராசிரியர்களுக்கான இடங்கள் காலியாக இருக்கின்றன. அதனால் பல கல்லூரிகளில் ஒரே வகுப்பில் நூறு, இருநூறு… என மாணவர்கள் ஆடு மாடுகள் மாதிரி அடைக்கப்பட்டு இருக்கிறார்கள். உதாரணத்துக்கு, குஜராத் பல்கலைக்கழகத்துக்குச் சென்று பாருங்கள். அங்கே இதழியல் துறையில் இருக்கும் 12 பாடங்களைச் சொல்லிக்கொடுக்க ஒரே ஒரு உதவி பேராசிரியர் மட்டுமே இருக்கிறார். இந்த மாநிலத்தில் பள்ளிக்கூடங்களின் நிலையும் இதேபோலத்தான். 47 ஆயிரம் ஆசிரியர் பதவிகள் இங்கே காலியாக இருக்கின்றன. பல ஆண்டுகளாக நிரப்பப்படவில்லை.
10-ம் வகுப்பை எட்டுவதற்குள் பாதியிலேயே படிப்பை நிறுத்திவிட்டு லட்சக்கணக்கான மாணவர்கள் பள்ளிக்கூடத்தை விட்டு வெளியேறிவிடுகிறார்கள். உதாரணத்துக்கு, 2003-ம் ஆண்டு இந்த மாநிலத்தில் 1-ம் வகுப்பில் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 17 லட்சத்து 80 ஆயிரம். ஆனால், 2013-ம் ஆண்டு 10-ம் வகுப்புத் தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை வெறும் 10 லட்சத்து 30 ஆயிரம். அதாவது, 10-ம் வகுப்பை எட்டுவதற்குள் 7 லட்சத்துக்கு 50 ஆயிரம் மாணவர்கள் படிப்பைப் பாதியிலேயே விட்டுவிட்டார்கள். ஆரம்பக் கல்வியின் நிலை இதைவிட மோசம். இந்த மாநிலத்தில் நூற்றுக்கு இருபது பேர் இன்னமும் எழுதப்படிக்கத் தெரியாதவர்களாகத்தான் இருக்கிறார்கள்.
‘கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் மாணவர் தற்கொலை’ என்ற செய்தியும், ‘சம்பளம் கிடைக்காததால் கல்லூரி உதவி பேராசிரியர் தற்கொலை’ என்ற செய்தியும் அடுத்தடுத்து வருகின்ற நிலைமையில்தான் குஜராத்தில் கல்வி இருக்கிறது.
















