ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனைக் காப்பாற்ற உதவிய ரோபோவின் உருவாக்கம் மற்றும் செயல்பாடு குறித்து, அதனை உருவாக்கிய மணிகண்டன் விளக்கியுள்ளார்.
சங்கரன்கோவில் அருகே உள்ள குத்தாலப்பேரியை சேர்ந்த விவசாயி கணேசன், இவர் தனது 3வயது மகன் ஹர்சனை அழைத்துக் கொண்டு நேற்று தோட்டத்திற்கு வேலை செய்ய சென்றுள்ளார்.
அப்போது, தோட்டத்தில் விளையாடி கொண்டிருந்த சிறுவன், மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளான்.
மகனின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த தந்தை, உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார்.
விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் காவல்துறையில் சிறுவனை மீட்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
மீட்பு பணியின்போது சிறுவனுக்கு மூச்சுத் திணறல் ஏற்படாமல் இருக்க ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டு கொண்டே பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டும் பணி நடைபெற்றது.
பல மணிநேர தீவிர போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட சிறுவன் சிகிச்சைக்காக உடனடியாக சங்கரன்கோவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளான்.
சிறுவன் மீட்கப்பட்டது குறித்து மாவட்ட ஆட்சியர் கருணாகரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், மதுரையில் இருந்து கொண்டு வரப்பட்ட சிறப்பு ரோபோவின் உதவியுடன் சிறுவன் மீட்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
ரோபோவின் செயல்பாடு
சிறுவனைக் காப்பாற்ற உதவிய ரோபோவின் உருவாக்கம் மற்றும் செயல்பாடு குறித்து, அதனை உருவாக்கிய மணிகண்டன் விளக்கியுள்ளார்.
அவர் கூறுகையில், கடந்த 2003-ம் ஆண்டு நான் கோவில்பட்டிக்கு பிளம்பர் வேலைக்கு வந்தேன்.
அப்போது, நான் வேலையில் ஈடுபட்டிருந்தபோது, அருகில் விளையாடிக் கொண்டிருந்த எனது 3வயது மகன் தினேஷ்பாபு அங்குள்ள ஆழ்துளைகிணற்றில் விழும் தருவாயில் காப்பாற்றினேன்.
அச்சம்பவத்திற்கு பின் ஒரு ரோபோ கருவியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற முயற்சியில் இறங்கினேன். ஆரம்பத்தில் எனது செலவில் உருவாக்கிய கருவியின் அதன் மூலம் வெற்றி கிடைக்கவில்லை.
பின்னர் நான் பணிபுரியும், மதுரை டி.வி.எஸ். கம்யூனிட்டி கல்லூரி நிர்வாகத்தின் உதவியோடு படிப்படியாக கருவியை நவீனப்படுத்தினேன்.
இக்கருவியின் செயல்பாடு குறித்து தீயணைப்புத் துறைக்கு பலமுறை கடிதங்கள் அனுப்பியும் பதில் வரவில்லை.
இதனையடுத்து எனது சொந்த பணத்தை செலவிட்டு சென்னைக்கு சென்று, கருவியின் செயல்விளக்கத்தை செய்து காட்டியிருக்கிறேன். ஆனால், இதுவரை அரசு தரப்பிலிருந்து எவ்வித ஒத்துழைப்பும் அளிக்கப்படவில்லை.
இக்கருவியை யார் வேண்டுமானாலும் இயக்க முடியும். இதைத் தயாரிக்க ரூ. 60,000 வரை தான் செலவாகும்.
இக்கருவியை மாவட்டம்தோறும் தீயணைப்பு நிலையங்கள் தோறும் வைத்துக்கொண்டால், மீட்பு பணிகளுக்குப் பயன்படுத்தி குழந்தைகளைக் காப்பாற்ற முடியும்.
சங்கரன்கோவில் பகுதியில் அனைத்து தரப்பினரின் முழு ஒத்துழைப்புடன் மீட்பு பணியை மேற்கொண்டதால், அதிஷ்டவசமாக சிறுவனை உயிருடன் மீட்டோம் என கூறியுள்ளார்.
மேலும் கூறுகையில், 2 அடி உயரமும், 5 கிலோ எடையும் உள்ள இந்த இயந்திரம் 12 வி பேட்டரி, டிசி மோட்டார் மூலம் இயங்குகிறது.
எங்கும் எளிதாக எடுத்துச் செல்லக்கூடிய இக்கருவியை மின்சப்ளை இல்லாத இடங்களிலும் பேட்டரி மூலமாக இயக்க முடியும்.
மேலும், ஆயிரம் அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றில் குழந்தைகள் சிக்கினாலும் இக்கருவியால் மீட்க முடியும். குழந்தையை மீட்கும்போது குழந்தை நழுவாமல் இருக்க, மடங்கும் விரல் அமைப்பும் பொருத்தப்பட்டுள்ளது.
குழிக்குள் சிக்கிய குழந்தையை அழுத்தும்போது ஏற்படுத்தும் அழுத்த அளவை துல்லியமாக அறிந்து கொள்ள, `பிரஸ்ஸர் கேஞ்ச்’ அமைப்பும் பொருத்தப்பட்டுள்ளது.
மேலும், குழிக்குள் தவறி விழுந்த குழந்தையின்மீது மண் சரியாமல் இருக்க மண் அள்ளும் இயந்திரம், வாக்குவம் பம்ப் ஆகியவையும் இதில் பொருத்தப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.
















