தமிழ்சினிமாவில் சமீபகாலமாக இளம் ஹீரோக்களின் அளப்பறை கொஞ்சம் ஓவராகத்தான் போய்க்கொண்டிருக்கிறது. தாங்கள் ஹீரோவாக நடித்த படத்தின் விழாவுக்கு வரும் அவர்கள் கூடவே ரசிகர்கள் கூட்டத்தையும் கூட்டி விட்டு திரையுலக பிரபலங்களுக்கும், பத்திரிகை நிருபர்களுக்கும் தொல்லை கொடுப்பது அதிகரித்து வருகிறது.
சில வாரங்களுக்கு முன்பு சென்னை சத்யம் தியேட்டரில் நடைபெற்ற ‘மான் கராத்தே’ படத்தின் ஆடியோ பங்ஷனில் சிவகார்த்திகேயனின் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் கூடியதால் தயாரிப்பாளர் தரப்பில் பவுன்சர்களை களமிறக்கினார்கள். அவர்களோ ரசிகர்களை கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக விழாவுக்கு வந்த சிறப்பு விருந்தினர்களையும், நிருபர்களையும் உள்ளே விடாமல் பெருமை பிரச்சனையை கிளப்பி விட்டார்கள்.
கடந்த ஞாயி்ற்றுக்கிழமை அதே சத்யம் தியேட்டரில் நடைபெற்ற ‘அரிமா நம்பி’ ஆடியோ பங்ஷனிலும் இந்த பவுன்சர்களின் தொல்லை தொடர்ந்தது.
நேற்று தேவி தியேட்டரில் நடைபெற்ற சந்தானத்தின் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்தின் ஆடியோ பங்ஷனோ, இந்த பங்ஷன்களையெல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு சந்தானம் ரசிகர்களின் அளப்பறை கொஞ்சம் ஓவராகவே இருந்தது.
பங்ஷன் நடைபெற இருந்த தியேட்டருக்குள் திடீரென்று ஒரு பெரும் கும்பலே உள்ளே நுழைய முயன்றது. அவர்கள் வேறு யாருமல்ல, சந்தானத்தின் ரசிகர்கள் தான். அவருக்கு போடுவதற்காக ஆளுயர மாலையை வாங்கி வந்த அவர்கள் கும்பலாக உள்ளே வர முயற்சி செய்ததால் அவர்கள் நுழைந்த போது கதவையும் உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தார்கள்.
ரசிகர்கள் வர தனி வழி அமைக்கப்பட்டிருந்தாலும் திரையுலக பிரமுகர்கள் அதே வழியிலேயே அவர்களை வரவைத்து, தனது ரசிகர்கள் பலத்தை காட்டினார். இதனால் அதே வழியில் வந்த சில திரையுலக பிரபலங்களையும் கூட அவர்கள் இடித்து தள்ளினார்கள். இந்த தள்ளி முள்ளு நடந்த ஏரியாவுக்கு அருகிலேயே இருந்த சந்தானமோ ரசிகர்களை சமாதானப்படுத்தாமல் ஹாயாக போனில் பேசிக் கொண்டிருந்தார்.
ஆனால் இந்த கூட்டத்தை கூட்டும் ஆட்டம் எல்லாமே சிவகார்த்திகேயனுக்கு போட்டியாகத்தான் சந்தானம் செய்கிறார் என்கிறார்கள் அவரை நன்கு தெரிந்தவர்கள்.
சந்தானம் திரையுலகிற்குள் வந்து நகைச்சுவை நடிகராக வளர்ந்து, இன்று ஹீரோவாக வளர்ந்து நிற்கிறார். ஆனால், அவருக்குப் பின்னால் திரையுலகிற்குள் வந்த சிவகார்த்திகேயன் குறுகிய காலத்திற்குள்ளேயே வசூல் ஹீரோவாக வளர்ந்துள்ளதால், அதைக் கண்டு சந்தானம் கொதித்துப் போய் உள்ளாராம்.
தனக்குப் பின்னால் வந்தவர் இப்படி பெரிய ஹீரோவாகும் போது, பல படங்களின் வெற்றிக்குக் காரணமாக இருந்த நாம் ஏன் ஹீரோவாக மாறக் கூடாது என்று யோசித்துதான் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்தில் ஹீரோவாக நடித்தாராம்.
‘மான் கராத்தே’ படத்தின் ஆடியோ பங்ஷனில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கூட்டமாக வந்ததால், தனது படத்தின் ஆடியோ பங்ஷனிலும் அதைவிடப் பெரிய அளவில் கூட்டத்தைக் கூட்டிக் காட்ட வேண்டும் என்று சந்தானம் முடிவெடுத்து திட்டமிட்டுத்தான் இந்த ரசிகர்களின் கூட்டத்தை சந்தானம் கூட்டினாராம்.
இப்படி இவர்கள் மாறி மாறி போடும் ஆட்டத்துக்கு முடிவு கட்டப்போவது யாரோ…?
















