“கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ததினால் மூன்றாண்டு தண்டனைபெற்றார் வடிவேலு. அதிலிருந்து தண்டனையிலிருந்து மீண்டு வர பல வழிகளில் ஆளும்கட்சிக்கு தூதுவிட்டுக் கொண்டே இருந்தார். அங்கிருந்து பாசிட்டிவ்வான சிக்னல் வரவே இல்லை. எனவே, தன்னையே நொந்தபடி புலம்பிக்கொண்டிருந்தார். அதுமட்டுமல்ல, தற்போது அவர் கதாநாயகனாக நடித்து வரும் தெனாலிராமன் படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் கடைசிநேரத்தில் சிக்கலை ஏற்படுத்திவிடுவார்களோ என்ற பயத்திலும் இருந்தார்.
அவரது பயத்தை அதிகரிப்பதுபோலவே தொடர்ந்து பல சம்பவங்கள் நடைபெற்று வந்தன. இப்படியான சூழலில், கடைசிமுயற்சியாக ஒரு கல்லை வீசிப்பார்ப்போம் என்று தன் மானேஜர் முத்தையா என்பவர் மூலம் ஒரு முயற்சியை செய்தார் வடிவேலு. அதாவது, ஆளும்கட்சி சேனலான ஜெயா டிவிக்கு தன் மானேஜரை அனுப்பி, தமிழ்ப்புத்தாண்டுக்கான சிறப்பு நிகழ்ச்சி செய்ய ஆர்வமாக இருப்பதாக சொன்னார்.
ஜெயா டிவியில் உள்ள முக்கிய நிர்வாகியிடம் நடந்த பேச்சு வார்த்தை விவரத்தை, அதாவது வடிவேலுவின் கோரிக்கையை மேலிடத்தின் அனுமதிக்கு அனுப்பப்பட்டது. அங்கிருந்து க்ரீன் சிக்னல் வரவே, வடிவேலுவை வைத்து தமிழ்ப்புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி படமாக்கப்பட்டு ஒளிபரப்பப்பட்டது. இதற்கிடையில், தமிழ்ப்புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிக்கு வடிவேலுவை அணுகியது கலைஞர் தொலைக்காட்சி.
பிடிகொடுக்காமல் பேசிய வடிவேலு கடைசிவரை பேட்டி கொடுக்கவே இல்லை. அதுமட்டுமல்ல, கலைஞர் டி.வியிலிருந்து யார் தொடர்பு கொண்டாலும் எனக்கு லைன் கொடுக்க வேண்டாம், நீங்களே எதையாவது பேசி கட் பண்ணிவிட்டுடுங்க என்று தன் ஊழியர்களிடம் சொல்லிவிட்டாராம். அதுக்குள்ளே நன்றி கெட்ட மனுஷனாயிட்டாரே என்ற வடிவேலுவை வறுத்தெடுக்கிறதாம் கலைஞர் டிவி வட்டாராம்.
















