தமிழக சட்டப் பேரவையில் தன்னுடன் நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா என்று திமுக தலைவர் கருணாநிதிக்கு முதல்வர் ஜெயலலிதா சவால் விடுத்துள்ளார்.
செய்யாறில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா, காவிரிப் நதிநீர்ப் பிரச்னையில் ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடாத கருணாநிதி பல துரோகங்களை செய்திருக்கிறார்.
அண்மையில் திருவாரூர் பொதுக் கூட்டத்தில் பேசிய கருணாநிதி, காவிரிப் பிரச்னை குறித்து வாதம் செய்ய பேரவையில் நேரம் ஒதுக்கலாம்.அதிலே விவாதித்து யார் தவறு செய்தார்கள் என்ற உண்மையை மக்களுக்கு விளக்கட்டும் என்று கூறியிருக்கிறார்.
நான் கருணாநிதியின் சவாலை ஏற்கிறேன். மக்களவைத் தேர்தல் முடிந்து, சட்டப்பேரவை கூட்டப்பட்டவுடன் காவிரிப் பிரச்னை குறித்து விவாதிக்க நான் தயார்.
மேலும், அதிமுக சார்பில் நான் பேசுவேன்.இதேபோல், கருணாநிதியும் சட்டப்பேரவை விவாதத்தில் கலந்து கொண்டு என்னை நேருக்கு நேர் சந்தித்து விவாதிக்கத் தயாரா? இதுகுறித்த முடிவை அவர் அறிவிக்க வேண்டும்.
அவர் விவாதிக்க தயார் இல்லையெனில் துரோகங்கள் இழைக்கப்பட்டது உண்மைதான் என்பதை கருணாநிதியே ஒப்புக் கொள்கிறார் என்று பொருள் என கூறியுள்ளார்.
















