இலங்கைத் தமிழர்களை ஒருபோதும் காங்கிரஸ் கைவிடாது- சோனியாகாந்தி

sonia-gandhiஇலங்கைத் தமிழர்களை ஒருபோதும் காங்கிரஸ் கட்சி கைவிடாது. இலங்கைத் தமிழர்களுக்காகக் காங்கிரஸ் கட்சி எதுவுமே செய்யவில்லை என்று குற்றஞ்சாட்டுகின்றன அரசியல் கட்சிகள். இலங்கைத் தமிழர்களுக்காக உன்னதமான தலைவர் ராஜீவ் காந்தி இரத்தம் சிந்தியதை மறக்க முடியுமா? அதை விடவும் என்ன தியாகம் செய்ய முடியும்?.” என்று உருக்கமாகக் கூறியுள்ளார் காங்கிரஸ் கட்சியின் தலைவியும் இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மனைவியுமான சோனியாகாந்தி.

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் ஆரம்பமாகியுள்ளது. தேர்தல் பரப்புரைகளும் சூடு பிடித்துள்ளன. தமிழகத்தின் தேர்தல் பரப்புரைகளில் ஈழத் தமிழர்கள் விவகாரமே அரசியல் கட்சிகளின் மையப்புள்ளியாக மாறியுள்ளது. அதை முன்னிலைப்படுத்தியே அரசியல் கட்சிகள் தமது பரப்புரைகளை தீவிரப்படுத்தியுள்ளன.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் நேற்று கன்னியாகுமாரியில் நடந்தது.
அந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி பங்கெடுத்திருந்தார். அங்கு அவர் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு உணர்சிபூர்வமாக உரையாற்றியுள்ளார்.

“”காங்கிரஸ் கட்சி குறித்து யாரும் பொய்ப்பரப்புரைகளை மேற்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றேன். இலங்கைத் தமிழர்களுக்காக காங்கிரஸ் கட்சி எதையுமே செய்யவில்லை என்று இங்குள்ள அரசியல் கட்சிகள் கூறுகின்றன. இலங்கைத் தமிழர்களுக்காக காங்கிரஸ் கட்சியை விடவும் எந்தக் கட்சி நன்மைகள் செய்தது என்று கூறமுடியுமா?

அருமையான உன்னதமான தலைவர் ராஜிவ் காந்தி, இலங்கைத் தமிழர்களுக்காக இரத்தம் சிந்தியதை மறக்க முடியுமா? அதைவிடவும் உயர்ந்த தியாகம் என்ன இருக்கின்றது. அரசியல் ஆதாயத்துக்காக காங்கிரஸ் கட்சியைக் குறை கூறவேண்டாம். இலங்கைத் தமிழர்களுக்கு காங்கிரஸ் கட்சி இனியும் உதவிகள் செய்யும். இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு காண போதிய நடவடிக்கை எடுத்துள்ளோம்” என்று தெரிவித்தார்.

இலங்கை இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பாக அவர் குறிப்பிடுகிகையில், “”மீனவர்கள் படும் துன்பம் எனக்குத் தெரியும். காங்கிரஸ் தலைமையிலான அரசு மீனவர்களுக்கு நல்வாழ்வு ஏற்படுத்தி கொடுத்துள்ளது. மீனவர் பிரச்சினை தொடர்பில் எமது ஐக்கிய முற்போக்குக் கூட்டணியால் எடுக்கப்பட்ட முயற்சிகள் தமிழ்நாட்டு அரசின் மந்தமான அணுகுமுறையாலேயே தொய்வடைந்துள்ளன.” என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags: , ,

Leave a Reply