வடிவேலு நடித்த ‘தெனாலிராமன்’ திரைப்படத்தை வெளியிட தடை கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது. அதேபோல இன்று நடிகர் வடிவேலு உட்பட தெனாலிராமன் படக்குவினரும், தெலுங்கு அமைப்பினரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு பிரச்சனையை பேசி தீர்த்துக் கொண்டதால் திட்டமிட்ட தேதியில் படம் ரிலீசாகிறது.
முன்னதான கிருஷ்ணதேவராயரை இழிவுபடுத்துவதாக சில தெலுங்கு அமைப்புகள் தெனாலிராமன் படத்துக்கு தடை கோரி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இது தொடர்பாக பழந்தமிழர் மக்கள் கட்சி நிர்வாகி வீரகுமார் என்பவர் தாக்கல் செய்த மனுவில், “நடிகர் வடிவேலு நடித்த தெனாலிராமன் படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது. இதில், விஜயநகரப் பேரரசர் கிருஷ்ணதேவராயர் வேடத்தில் வடிவேலு நடிக்கிறார்.
கிருஷ்ணதேவராயர் சிறந்த போர் வீரர். சிறப்பான ஆட்சி நடத்தியவர். தென்னிந்தியாவில் இஸ்லாமிய படையெடுப்பை தடுத்தவர் என பள்ளி வரலாற்று பாடத்தில் படித்திருக்கிறேன். அவரது வேடத்தை ஏற்றுள்ள வடிவேலு கோமாளி போன்று காட்சி தருகிறார். மேலும், மூடர்கள் பேசுவது போல் அவரது வசனங்கள் உள்ளன. கிருஷ்ண தேவராயருக்கு 36 மனைவியர் 52 குழந்தைகள் இருப்பதாகவும் படத்தில் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இது போன்ற வரலாற்று தகவல் கிடையாது. ஒரு பேரரசரின் வரலாற்றை திரித்துக்கூறி பணம் சம்பாதிக்க முற்படுவதை ஏற்கக்கூடாது.
மேலும் இந்த படத்தை பார்க்கும் குழந்தைகள் கிருஷ்ணதேவராயரை ஒரு கோமாளி போல் கற்பனை செய்ய வாய்ப்பு உள்ளது. எனவே படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும்,” என அதில் குறிப்பிட்டிருந்தார்.
இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், வி.எம்.வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு “வரலாறுகளை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக எழுதியிருக்கின்றனர். எனவே வரலாறு அடிப்படையில் திரைப்படத்துக்கு தடை கோருவதை ஏற்க முடியாது,” எனக் குறிப்பிட்டு மனுவைத் தள்ளுபடி செய்தனர்.
அதே நேரத்தில் இந்த தீர்ப்பு வந்த சில மணி நேரத்தில் சென்னை ரெசிடென்ஸி ஹோட்டலில் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் வடிவேலுவே நேரில் வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதில் தெலுங்கு மக்கள் பேரவையினர் கேட்ட கேள்விகளுக்கு தயாரிப்பாளரும், வடிவேலுவும் விளக்கமாக பதில் அளித்ததால் அந்த பதிலில் திருப்தியடைந்த தெலுங்கு மக்கள் பேரவையினர் படத்துக்கு தங்களது எதிர்ப்பை கை விட்டுவிட்டதாக அறிவித்துவிட்டனர்.
இதையடுத்து வரும் வெள்ளியன்று ‘தெனாலிராமன்’ படம் ரிலீஸாவது உறுதியாகி விட்டது. இன்றைக்கே தமிழகத்தில் அட்வான்ஸ் புக்கிங்கும் துவங்கி விட்டதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
3 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு வடிவேலுவின் தெனாலிராமன் ரிலீசாகப் போவதால் தமிழ் ரசிகர்கள் மத்தியில் இந்தப்படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
















