இங்கிலாந்து நாட்டில் மிக குறைந்த வயதில் பெற்றோரான தம்பதியர் குறித்த தகவல் இன்று வெளியாகியுள்ளது. சில சட்ட சிக்கல்கள் காரணமாக பெயர்கள் வெளியிடப்படாத தம்பதியரில் தாயின் வயது 12. தந்தையின் வயது 13.
இவர்கள் இருவரும் வெவ்வேறு பள்ளி கூடங்களில் படித்து வருகின்றனர். கடந்த 2012ம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தையட்டி இவ்விருவரும் சந்தித்து கொண்டனர். சிறுமிக்கு அப்பொழுது வயது 10. சிறுவனுக்கு வயது 12. இவர்கள் இருவரும் ஒரு வருடமாக சந்தித்து தங்களது காதலை வளர்த்துள்ளனர்.
11 வயதில் கர்ப்பிணி
அதன் பின்னர் அந்த சிறுமி தனது 11வது வயதில் கர்ப்பிணியாகி உள்ளாள். கடந்த வாரம் பெண் குழந்தைக்கு தாயான அந்த சிறுமி நேற்று தனது தாய் மற்றும் மற்றொரு பெண்ணுடன் சென்று பதிவாளர் அலுவலகத்தில் குழந்தை பிறப்பை பதிவு செய்துள்ளார். அந்த குழந்தை 7 பவுண்டு எடையுடன் உள்ளது. இங்கிலாந்தில் மிக குறைந்த வயதில் தாயான ட்ரெசா மிடில்டனை விட தற்பொழுது தாயாகியுள்ள சிறுமி 5 மாதங்கள் இளையவள்.
குறைந்த வயதில் பாட்டி
12 வயது கடந்து 3 மாதங்கள் ஆகியுள்ள இந்த சிறுமியின் தாய்க்கு வயது 27. இதனால், அந்த தாயும் மிக குறைந்த வயதில் பாட்டியாகியுள்ளார். இங்கிலாந்தின் வடக்கு லண்டன் பகுதியை சேர்ந்த இவர்கள் இருவரின் வயதும் இணைந்து 25 தான் ஆகியுள்ளது. பள்ளிக்கூடத்தில் படித்து வந்த சிறுமி குழந்தை பெறுவதற்கு ஒரு மாதம் முன்பாகவே பள்ளியில் இருந்து நின்றுள்ளாள். அதுவரை அவள் கர்ப்பிணி போன்று உடன் படித்தவர்களுக்கு தெரியவில்லை.
இங்கிலாந்தின் மிக குறைந்த வயதில் பெற்றோரானவர்களான ஏப்ரல் வெப்ஸ்டர் மற்றும் நாதன் பிஷ்போர்ன் ஆகியோர் தங்களது 13 வயதில் பெற்றோர் ஆனார்கள். அவர்கள் இருவரும் பள்ளிக்கூடத்தில் படித்தவர்கள்தான். அவர்களை தாண்டி சாதனை படைத்து தற்பொழுது இந்த தம்பதியர் மிக குறைந்த வயதில் இங்கிலாந்தில் பெற்றோராகியுள்ளனர்.
தேசிய புள்ளியியல் அலுவலகம்
இங்கிலாந்து நாட்டின் தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலில், கடந்த 1969ம் வருடத்தில் இருந்து எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, மிக குறைந்த அளவாக 15 முதல் 17 வயதிற்கு உட்பட்ட 1,000 பெண்களில் 27.9 பேர் கர்ப்பமாகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 2012ம் ஆண்டில் 18 வயதிற்கு உட்பட்ட பெண்கள் கர்ப்பிணி ஆவது 27,834 ஆக இருந்துள்ளது. இது அதற்கு முந்தைய 2011ம் ஆண்டில் 31,051 ஆக இருந்துள்ளது. இது 10 சதவீதமாக குறைந்துள்ளது. இதேபோன்று, 16 வயதிற்கு உள் கர்ப்பமாவோரில் கடந்த 2012ம் ஆண்டில், 5,432 பேர் இருந்துள்ளனர்.
இது அதற்கு முந்தைய 2011ம் ஆண்டில் 5,991 ஆக இருந்துள்ளனர். இது 9.3 சதவிகிதம் குறைவாகும். 16 வயதிற்கு உட்பட்டோரில், 3,251 பேர் தங்களது கர்ப்பத்தை கலைத்துள்ளனர். இது அவர்களின் கர்ப்ப சதவீதம் என எடுத்து கொண்டால் 59.8 சதவீதமாகும்.
இது அதற்கு முந்தைய ஆண்டில் 60.2 சதவீதமாகவும் மற்றும் அதற்கு முந்தைய ஆண்டில் 62.5 சதவீதமாகவும் இருந்துள்ளது. மேலும், கடந்த 2012ம் ஆண்டில் 14 வயதிற்கு உட்பட்டோர் 253 பேர் கர்ப்பமாகியுள்ளனர். இது அதற்கு முந்தைய ஆண்டை காட்டிலும் குறைவானதாகும். மேலும் அவர்களில் 3 பங்கினர் கர்ப்பத்தை கலைத்துள்ளனர் என்று தகவல் தெரிவிக்கின்றது.
















