“இறுதிப்போரின் தாக்கத்தால் ஏற்பட்ட மன உழைச்சலால் பாதிக்கப்பட்டிருந்த மூன்று பிள்ளையின் தந்தை ஒருவர் மருந்து அருந்தி தற்கொலை”
இறுதிப்போரின் தாக்கத்தால் ஏற்பட்ட மன உழைச்சலால் பாதிக்கப்பட்டிருந்த மூன்று பிள்ளையின் தந்தை ஒருவர் மருந்து அருந்தி தற்கொலை செய்து கொண்ட பரிதாபகர சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
வாகனங்கள் உட்பட்ட சொத்துக்களுடன் நிறைவான வாழ்க்கை வாழ்ந்து வந்த இயக்கச்சி கிளிநொச்சியைச் சேர்ந்த நாகரத்தினம் 38 வயதுடைய விக்கினேஸ்வரன் என்பவர் இறுதிப் போரின் போது தனது வாகனங்கள் உட்பட்ட சொத்துக்களை இழந்திருக்கின்றார்.
அவற்றினை மீளப் பெற முடியாத நிலையில் பொருளாதார ரீதியாக கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த அவர் அதிகமான மதுபோதைப் பாவனைக்கு உட்பட்ட நிலையில் நுரையீரல் பாதிப்புக்கு உட்பட்டிருக்கின்றார்.
இந்நிலையில் கடந்த 11ஆம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு 16ஆம் திகதி வீடு செல்ல அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். அங்கிருந்து சென்ற அவர் நஞ்சினை விற்பனை நிலையம் ஒன்றில் பெற்றுக் கொண்டு செம்மணிப் பகுதியில் சென்று அதனை அருந்திவிட்டு மிருசுவிலில் உள்ள தனது தாயாருக்கு அறிவித்திருக்கின்றார்.
அங்கு சென்ற அவருடைய தாயார் தனது மகனை வேறு சிலரின் உதவியுடன் மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்திருக்கின்றார்.
இன்று அதிகாலை 6மணியளவில் குறித்த குடும்பஸ்தர் உயிரிழந்ததாகவும் அவருடைய மரணம் தொடர்பில் யாழ்.போதனா வைத்தியசாலை பதில் மரண விசாரணை அதிகாரி பிறேம்குமார் விசாரணை நடத்தியிருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்த விக்னேஸ்வரனுக்கு முறையே 10,07,03 வயதுகளை உடைய பிள்ளைகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
















