விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படும் 40 பேர் உட்பட 96 இலங்கையர்களுக்கு எதிராக சர்வதேசப் பொலிஸார் ஊடாகச் சிவப்பு முன்னறிவிப்பு (பிடிவிறாந்து) பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோகண வெளியிட்டுள்ளார்.
சிவப்பு முன்னறிவிப்பு பிறப்பிக்கப்பட்டவர்களில் 40 பேர் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் ஏனைய 56 பேர் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச ஆயுத விநியோகஸ்தரான கே.பி. என்று கூறப்படும் குமரன் பத்மநாதனுக்கு எதிராக சர்வதேசப் பொலிஸார் ஊடாகப் பிறப்பிக்கப்பட்டிருந்த சிவப்பு முன்னறிவிப்பு நீக்கப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அவர் பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபடாத காரணத்தாலேயே அவர் மீதான சிவப்பு முன்னறிவிப்பு நீக்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸ் பேச்சாளர் விளக்கமளித்துள்ளார்.
இதுகுறித்து விளக்கமளித்த பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோகண, 96 இலங்கையர்களுக்கு சர்வதேசப் பொலிஸார் ஊடாக சிவப்பு முன்னறிவிப்பு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 40 பேர் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள். இலங்கையில் விடுதலைப்புலிகள் அமைப்பு மீண்டும் ஒன்றிணைவதைத் தடுப்பதற்காகவே இந்தப் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச வலைப்பின்னலை இயக்கும் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினரான நெடியவன் மற்றும் விநாயகம் ஆகியோருக்கு எதிராகவும் இந்த சிவப்பு முன்னறிவிப்பு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 190 நாடுகளுக்கு சர்வதேசப் பொலிஸார் இந்த சிவப்பு முன்னறிவிப்புகளைப் பிறப்பித்துள்ளனர்.
போர் முடிவடைந்த பின்னர் கைதுசெய்யப்பட்ட 100க்கும் மேற்பட்டவர்கள் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரின் தடுப்பில் வைக்கப்பட்டுள்ளனர். குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க ஆதாரம் இல்லாததால் சிலரை நாங்கள் விடு தலை செய்துள்ளோம்.
ஏனையோர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மீண்டும் ஒரு போர் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காகவே நாம் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்” என்று தெரிவித்தார்.
















