‘ரஜினி பொம்மை’ நடித்த கோச்சடையான் படத்தின் வெளியீட்டு தேதியில் ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்து வருவதை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
ரஜினியின் ரசிகர்களுக்கோ சொல்ல முடியாத வேதனை.
தன் தலைவன் படம் வெளியாகும் தினத்தை தீபாவளியைவிட சிறப்பாகக் கொண்டாடும் அவர்கள், கோச்சடையான் குளறுபடிகளைக் கண்டு வேதனையில் இருக்கிறார்கள்.
சொன்ன தேதியில் கோச்சடையான் படத்தை வெளியிட முடியாமல் போனதுக்கு என்ன காரணம் தெரியுமா?
நம்புங்கள்…! கோச்சடையான் படம் பிசினஸ் ஆகவில்லை! அதாவது…அந்தப் படத்தை வாங்க ஆளில்லை!
இதை நாம் சொல்லவில்லை.
தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்களின் சங்கத்தின் தலைவர் கேயாரே சொல்லி இருக்கிறார்.
‘நாங்கெல்லாம் ஏடாகூடம்’ என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசும்போது கேயார்தான் இந்த உண்மையை போட்டு உடைத்தார்.
இதோ அவரது பேச்சு…!
“இந்தப் படத்தின் தயாரிப்பாளர் இப்பத்தான் ஆடியோ ஃபங்ஷனை முடிக்கிறார். இன்னமும் படத்தை ரிலீஸ் செய்யணும்.. அதுக்கு முன்னே படம் விக்கணும்.. படம் விக்கலையேன்னு வருத்தப்பட வேண்டாம். இப்போ ரஜினி நடிச்ச கோச்சடையான் படமே விக்க முடியாமத்தான் இருக்கு. அவருக்கே அதுதான் நிலைமை..”
– இதுதான் கேயாருடைய பேச்சின் சாரம்சம்.
ரஜினி என்ற மிகப்பெரிய ‘பிராண்ட்’ இருந்தும் ‘கோச்சடையான்’ படம் போணியாகாதது ஏன்? என்ன காரணம்?
ரஜினியின் மகள் சௌந்தர்யா ஏற்கனவே படத்தயாரிப்பில் இறங்கி பல கோடிகளை இழந்தார். அப்படி இழந்த மொத்தப் பணத்தையும் கோச்சடையான் படத்திலேயே அள்ளிவிட வேண்டும் என்று ஆசைப்படுகிறாராம்.
அவரது பேராசையின் காரணமாகவே கோச்சடையான் படத்துக்கு பல மடங்கு விலை சொல்கிறார்களாம்.
தவிர கோச்சடையான் ரஜினி ‘நடித்த படம்’ அல்ல, டூப்புகளை வைத்து எடுக்கப்பட்ட, ‘ரஜினி பொம்மை நடிக்கும்’ அனிமேஷன் படம். எனவே, இந்தப் படத்துக்கு ரசிகர்களின் ஆதரவு இருக்குமா? என்று தியேட்டர்காரர்களும், விநியோகஸ்தர்களும் அஞ்சுகிறார்கள்.
அந்த அச்சத்தின் காரணமாக சூட்கேஸைத் திறக்கத் தயங்குகிறார்கள்.
இன்னொரு பக்கம், “இந்தப் படத்தில் நஷ்டம் என்று சொல்லி யாரும் என்னிடம் வரக்கூடாது. இந்தப் படத்துக்கும் எனக்கும் சம்மந்தமில்லை” என்று ரஜினி கட் அண்ட் ரைட்டாக ஏற்கனவே சொல்லிவிட்டார்.
இதன் காரணமாகவும் சௌந்தர்யா சொல்லும் விலைக்கு கோச்சடையான் படத்தை வாங்கத் தயங்குகிறார்கள். (நஷ்டமானால் யார் வீட்டுக்கதவைத் தட்டுறது?)
மொத்தத்தில் கோச்சடையான் படத்தை சீண்ட ஆளில்லை…!
மே 9 ஆம் தேதி திட்டமிட்டபடி வெளிவருமா?
















