இந்தோனேசியா சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்கள் 9 பேர் கடந்த திங்கட்கிழமை தொடக்கம் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். தங்களை விடுதலை செய்து சுதந்திர நாடொன்றில் அகதியாக வாழ்வதற்கான அனுமதியை ஐ. நா. வழங்க வேண்டும்.
இல்லையெனில் கருணைக் கொலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தே இவர்கள் உணவு தவிர்ப்புப் போராட்டதை ஆரம்பித்துள்ளனர். உலகின் பல்வேறு நாடுகளில் புகலிடம் கோரிய ஈழத் தமிழர்கள் சித்திரவதைக்கு உள்ளாகி வருகின்றமை வழமையான ஒரு நிகழ்வாக மாறி விட்டது.
டுபாய், ஆஸ்திரேலியா, இந்தோனேசியா என நீளும் இந்தப் பட்டியலில் அவலத்துக்கு உள்ளாகும் புகலிடக் கோரிக்கையாளர்களை எந்தவொரு மனித உரிமை அமைப்புகளும் கண்கொண்டு பார்க்காத நிலை தொடர்ந்தபடி இருக்கிறது.
ஈழத்தில் நடந்து முடிந்த முள்ளி வாய்க்கால் இனப்படு கொலைக்குப் பின்னர் கடல் வழியாக பிற நாடுகளுக்கு அதிகமாகச் செல்லும் தமிழின உறவுகளின் அழுகுரல்களையும் கண்ணீர்களையும் ஏன் உயிர்களையும் கூடக் கடல் தின்கிறது. இல்லாது போனால் கரை சேரும் நாட்டின் அரசு கொடூரம் நிகழ்த்துகிறது.
இதன் ஓர் அங்கமாக கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக மிருகங்களை விட மிக மோசமாக எந்தவித அடிப்படை வசதிகளுமின்றி இந்தோனேசியா சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் 9 ஈழத் தமிழ் உறவுகள் தம்மை விடுதலை செய்து குடியேற்ற நாடுகளுக்கு அனுப்பி வைக்குமாறு கோரிக்கைகளை முன் வைத்து போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
















