சினிமா நடிகர்கள் வானத்திலிருந்து குதித்த தேவதூதன்கள் அல்ல, நம்மைப் போல் சதாரண மனுஷனுங்கதான்.
பாமர ரசிகர்களுக்கு இது குறித்த தெளிவும் புரிதலும் இல்லாததினால்தான், சினிமா நடிகன்களை தலையில் வைத்துக் கொண்டாடி வருகின்றனர்.
வீட்டில் உட்கார்ந்தபடியே….தன்னுடைய புகழ், பணத்தை வைத்து எல்லா இடங்களிலும்… எல்லா காரியங்களையும்…. சாதித்துக்கொள்ளும் சினிமா நட்சத்திரங்கள், தேர்தலில் வாக்களிக்க வரும்போது மட்டுமே மக்களோடு சேர்ந்து வரிசையில் நிற்கும் ‘பாக்கியத்தை’ பெறுகிறார்கள்.
ஆனால், பல நட்சத்திரங்கள் வாக்களிக்க வரும்போது வரிசையிலும் நிற்பதில்லை.
அப்படி நிற்பதை கேவலமாகவே எண்ணுகிறார்கள்.
எனவே அங்குள்ள அரசியல்கட்சிகளின் ஏஜெண்ட்களைப் பிடித்து வரிசையில் நிற்காமல் வாக்களிக்க தேவையான ஏற்பாட்டை செய்துவிடுகின்றனர்.
சினிமா நடிகன்களிடம் கையூட்டைப் பெற்றுக் கொண்டு அரசியல் கட்சிகளின் ஏஜெண்டுகள், அவர்களை கைப்பிடித்து கூட்டிச் சென்று விடுகிறார்கள். கூடவே மீடியாக்களும் கேமிராக்களோடு மொய்க்க…
இந்த அராஜகத்தைத் தட்டிக் கேட்க வேண்டிய மக்களும் ஆவென வாயைப்பிளந்து கொண்டு நடிகன்களை பார்த்துக்கொண்டு நிற்கிறார்கள்.
இப்படிப்பட்ட எந்த விதிமீறல்களையும் செய்யாமல், சராசரி மக்களைப்போலவே வரிசையில் நின்று வாக்களிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார் நடிகர் அஜித்.
விஜய், சூர்யா, கார்த்தி போன்ற முன்னணி ஹீரோக்கள் மட்டுமல்ல, ஜீவா போன்ற மூன்றாம்நிலை நடிகர்களும் கூட எத்தனை மணிக்கு எங்கே வாக்களிக்க வருகிறோம் என்பதை முன்கூட்டியே மீடியாக்களுக்கு தகவல் சொல்கிறார்கள்.
அவர்கள் வாக்களிப்பதை மீடியாக்கள் கவர் செய்ய வேண்டும் என்பதற்காக இப்படி ‘முன் ஏற்பாடுகளை’ செய்துவிட்டு வாக்களிக்க வருகிறார்கள்.
இந்த விஷயத்திலும் அஜித் தனித்தன்மைமிக்கவராக இருக்கிறார்.
தான் எப்போது வாக்களிக்க இருக்கிறேன் என்பதை மீடியாக்களுக்கு அவர் தெரிவிப்பதே இல்லை.
தனக்கு வசதிப்பட்ட நேரத்தில் வாக்குச்சாவடியை தேடி வருவார்.
எவ்வளவு கூட்டமிருந்தாலும் மக்களோடு மக்களாக வரிசையில் நின்று வாக்களிக்கிறார்.
எல்லா நடிகன்களும் அஜித் வழியைப் பின்பற்றினால் என்னவாம்..!?
















