நடிகர் மனோபாலா முதல்முறையாக தயாரிப்பாளராக களமிறங்கியிருக்கு ‘சதுரங்க வேட்டை’ படத்தின் ஆடியோ பங்ஷன் சென்னை சத்யம் தியேட்டரில் நடைபெற்றது.
விழாவில் பேசிய கவிப்பேரரசு இப்போதுள்ள இளம் ஹீரோக்கள் தயாரிப்பாளர்களிடம் நடந்து கொள்ளும் முறையைப் பற்றி ஆவேசப்பட்டார். ஹீரோக்கள் சம்பளம் கொடுக்கும் தயாரிப்பாளர்களை மதிப்பதில்லை என்று குற்றம் சாட்டினார்.
விழாவில் அவர் பேசியதாவது :
”நடிகர் மனோபாலாவை சுமார் 35 ஆண்டுகளுக்கு முன் பாரதிராஜா அலுவலகத்தில் சந்தித்தேன். இப்போதும் அவரது தோற்றத்தில் மாற்றமில்லை. அவரது மனமும் எடையும் இன்றும் மாறவில்லை. 3 தலைமுறைக் கலைஞர்களை ஒரு புள்ளியில் சந்திக்க வைக்கிற சாதனையை தன் படத்தின் மூலம் செய்திருக்கிறார். இதை எல்லாரும் நெருங்கிவிட முடியுமா?
அமெரிக்காவில் ஒரு ஆய்வு நடத்தினார்கள். ஒரு தனிமனித வெற்றியின் அடிப்படையாக இருப்பது எது..? திறமை 35 சதவிகிதம் இருக்க வேண்டும்.மக்கள் தொடர்பு 65 சதவிகிதம் இருக்கவேண்டும். அப்படிப் பார்த்தால் மனோபாலாவின் திறமை 35-50 சதவிகிதம் இருக்கலாம் தெரியாது. ஆனால் மக்கள் தொடர்பில் 100 சதவிகிதம் கொண்டவராக இருப்பார்.
இந்த பாடல் வெளியீட்டு விழா, இந்த கூத்து, கொண்டாட்டாம் இது எதுவுமே படத்தின் வெற்றிக்குப் பயன் படப்போவதில்லையே? பிறகு ஏன் இதை வலிந்து திணிக்கிறார்கள் என்று என் நண்பர்கள் கேட்டார்கள். அவர்களுக்கு நான் சொன்னேன் அது எனக்கும் தெரியும், சம்பந்தப்பட்டவர்களுக்கும் தெரியும். ஆனாலும் கூட கூடி மகிழ்கிற ஒரு கொண்டாட்டத்துக்காகத்தான் இந்த விழா என்று நான் நினைத்தேன். இங்கு சந்திக்காவில்லா இவர்களில் பலபேரை எங்கும் சந்திக்க முடியாது. அப்படி சந்திப்பதற்காக ஏற்பாடு தான் இந்த ஆடியோ பங்ஷன்கள் எல்லாம் என்று நான் நினைக்கிறேன்.
இந்தப்படத்தின் முன்னோட்டத்தைக் கொண்டாடியவர்கள் எல்லாம் ஆஹா என்று கொண்டாடினார்கள். பார்த்தவரைக்கும் அது அழகு தான். நானும் இதைப்பற்றி நெறைய கருத்து சொல்ல விரும்பவில்லை. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். அது சோற்றுக்கு வேண்டுமானால் பொருத்தமாக இருக்கும். படத்துக்கு பொறுத்தமாக இருக்காது. இந்தப்படம் நல்ல படமாக இருக்கும் என்பதற்கான அறிகுறிகளாகத்தான் நான் பார்க்கிறேன். ஒட்டுமொத்தமாக பார்த்து தான் ஒரு கருத்தை சொல்ல வேண்டியிருக்கிறது.
ஒரு படத்தை முழுவதுமாகப் பார்த்து எடை போடும் தகுதி 25 ,50, 100 ரூபாய் கொடுத்து பார்க்கும் ரசிகனுக்கு மட்டுமே உண்டு. அவன் தான் கருத்து சொல்லும் கடைசி நீதிபதி. அவர்கள் முன் நாமெல்லாம் கருத்து சொல்ல அருகதையற்றவர்களாக இருக்கிறோம்.
இப்போதெல்லாம் சினிமா மாறிவிட்டது. நான் தூரத்தில் ஒரு ரசிகனாக தூரத்தில் ஒரு யாத்ரீகனாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஒரு காலத்தில் தயாரிப்பாளர் தான் கதாநாயகன் என்றிருந்த காலம் ஒன்று உண்டு. இன்றைக்கு அது மாறி விட்டது. இன்றைக்கு தயாரிப்பாளர்கள் தேவைக்கு ஏற்ற பணம், தேவைக்கு அதிகமான பணிவுடனும் இருக்க வேண்டியிருக்கிறது. படம் தயாரிப்பவர்கள் நடிப்பவர்களுக்கு கும்பிட்டுக் கொடுக்க வேண்டியிருக்கிறது. பணம் வாங்குகிறவன் அலட்சியமாக வாங்கிக் கொள்கிறான். இங்கே பணம் கொடுப்பவர்கள் மதிக்கப்பட வேண்டும்.
இங்கே மாற்று சினிமா பற்றி ஞாநி பேசிய போது சினிமாவில் வெற்றி பெற்றவர்கள் மாற்று சினிமாவுக்கு கொஞ்சம் துணை நிற்க வேண்டும் என்று சொன்னார். அவர் சொன்ன கருத்து கொண்டாடப்பட வேண்டிய கருத்து. அதற்கு இந்த திரையரங்குகள் ஒழிய வேண்டும், வினியோகஸ்தர்கள் ஒழிய வேண்டும். படத்தின் செலவு 10 லட்சம் ரூபாய், 20 லட்சம் ரூபாய் என்று வர வேண்டும். அப்படி வரக்கூடிய காலத்தில் மாற்று சினிமா வரும். அப்படி வந்தால் அது இந்த நூற்றாண்டின் இறுதிக்குள்ளேயே வந்து விடும்.
சினிமா எப்படி வடிவம் கொள்ளும் என்றால் என்னைப் பொறுத்த வரையில் காலையில் தினத்தந்தி, தினகரன், தி ஹிந்து, தினமணி, தினமலர் இந்தப் பத்திரிகைகளோடு ஒரு சிடியும் வீசி எறியப்படும். அடுத்த சினிமா அப்படித்தான் இருக்கும். அந்தப்படங்களை பார்ப்பவர்கள் பார்க்கலாம். அப்போது தகுதியுள்ள படங்கள் தப்பித்துக்கொள்ளும். இது ஒரு பாசாங்கு சினிமா. பணம் போட்டவருக்கு அது தேவைப்படுகிறது. பாசாங்கு உள்ள சமுதாயத்தில் பாசாங்கும் விலை போய்த்தான் தீர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அதனால் தான் சிந்தனையாளர்கள் தடுமாறுகிறார்கள். அந்த தடுமாற்றத்தைத் தாண்டி போகக்கூடிய காலம் நிச்சயமாக வரும். அப்படி போன்ற காலகட்டத்தில் திறமைசாலிகள் நிலைத்து நிற்பார்கள்.
இவ்வாறு பேசினார்.
















