இலங்கை மீனவர்கள் 5 பேர் இந்திய கடலோர காவற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவின் ஒடிசா மாநிலம் பரடிப் கடற்கரையில் இருந்து 170 கடல் மைல் தொலைவில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
28 ஆம் திகதி கைது செய்யப்பட்ட இந்த இலங்கை மீனவர்கள் நேற்று பரடிப் கரையோர பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை மீனவர்களிடம் இருந்து 2.5 தொன் மீன்களை கைப்பற்றியதாக இந்திய கடலோர காவற்படையின் துணை ஆணையாளர் ஜே.வி. போல் தெரிவித்தார். ஐஸ் கட்டிகள் கொண்ட கொள்கலன்களில் இந்த 200 கிலோ மீன்கள் வைக்கப்பட்டிருந்தாகவும் அவர் கூறியுள்ளார். இலங்கை அரசாங்கம் வழங்கிய அடையாள அட்டைகளை இந்த மீனவர்கள் வைத்திருந்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை பரடிப் பொலிஸார் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியிருந்தனர். இதேவேளை கடந்த 4 ஆம் திகதி இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை மீன்பிடி படகு, இந்திய வெளிவிவகார அமைச்சரின் அறிவுறுத்தலுக்கு அமைய விடுவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
















