விசாரணை நடத்தினால் அதற்கு முகம் கொடுக்க அரசாங்கம் தயார் : நிமால் சிறிபால டி. சில்வா

Nimal-Siripala-de-Silvaஇலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு அமைய ஐ.நா. மனித உரிமை அலுவலகம் விசாரணை செயற்பாடுகளை ஆரம்பித்தால் அதற்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்காது. இது தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் எவ்விதமான மாற்றமும் இல்லை என்று நீர்ப்பாசன முகாமைத்துவ அமைச்சர் நிமால் சிறிபால டி. சில்வா தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகம் இலங்கை தொடர்பில் வெளிமட்டத்திலிருந்து விசாரணைகளை நடத்தினால் அதற்கு முகம் கொடுக்கவும் அரசாங்கம் தயாராகவே இருக்கின்றது. இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை அநீதியானதுடன் பக்கச் சார்பானது என்பதனை தெளிவாக வலியுறுத்தியுள்ளோம் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

இலங்கை மனித உரிமை விவகாரம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக இம்மாதமளவில் விசாரணைக் கட்டமைப்பை நிறுவுவதற்கான செயற்பாடுகளை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை அலுவலகம் ஆரம்பிக்கும் சாத்தியம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறித்து வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இம் மாதம் விசாரணைக் கட்டமைப்பை நிறுவவுள்ள மனித உரிமை பேரவை அலுவலகம் அது தொடர்பில் இலங்கைக்கும் அறிவிப்பதற்கு எதிர்பார்ப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் விசாரணைக் கட்டமைப்பு மற்றும் அதன் உறுப்பினர்களின் எண்ணிக்கையை தீர்மானிக்கும் செயற்பாடுகள் இடம்பெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் கடந்த மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு அமைய விசாரணை கட்டமைப்பு உருவாக்கப்படும் என்றும் மனித உரிமைப் பேரவை அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் அரசாங்கத்தின் சார்பில் அமைச்சர் நிமால் சிறிபால டி. சில்வா இந்த விடயம் குறித்து குறிப்பிடுகையில்,

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட
பிரேரணையை இலங்கை அரசாங்கம் முழுமையாக நிராகரித்துவிட்டது. அது பக்கச்சார்பானது என்றும் அநீதியானது என்றும் அரசாங்கம் தெளிவாக கூறிவிட்டது.
இந்நிலையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அலுவலகம் பிரேரணைக்கு அமைய விசாரணை செயற்பாடுகளை முன்னெடுக்கும் என்பது எமக்குத் தெரிந்த விடயமாகும். ஆனால் மனித உரிமைப் பேரவை அலுவலகத்தின் விசாரணை செயற்பாடுகளுக்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்காது. இதனை வெளிவிவகார அமைச்சு உறுதியாக கூறிவிட்டது.

அந்தவகையில் அரசாங்கத்தின் இந்த நிலைப்பாட்டில் எவ்விதமான மாற்றமுமில்லை. அதேவேளை ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகம் இலங்கை தொடர்பில் வெளிமட்டத்திலிருந்து விசாரணைகளை நடத்தினால் அதற்கு முகம் கொடுக்கவும் அரசாங்கம் தயாராகவே இருக்கின்றது. விசாரணை முன்னெடுக்கப்பட்டால் அதற்கு நாங்கள் முகம்கொடுப்போம் என்றார்.

இதேவேளை புலம்பெயர்ந்தோர் மனித உரிமை தொடர்பான ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் பிரான்சுவா கிரேபேவ் இம்மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
19 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதிவரை இலங்கையில் தங்கியிருக்கும் விசேட அறிக்கையாளர் பிரான்சுவா கிரேபேவ் புலம்பெயர்ந்தோர் மனித உரிமை தொடர்பாக ஆராய்வார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த மார்ச் மாதம் 27 ஆம் திகதி ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கை குறித்த

பிரேரணை 23 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. 12 நாடுகள் பிரேரணையை எதிர்த்ததுடன் 12 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளாமல் நடுநிலை வகித்தன.
நல்லிணக்க ஆணைக்குழுவினால் கவனிக்கப்பட்ட காலப்பகுதியில் இருதரப்பினராலும் இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் , விரிவான மற்றும் சுதந்திரமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்திடம் கோரிக்கை விடுத்து இலங்கை குறித்த பிரேரணை ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அந்தவகையில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் இடம்பெறவுள்ள பேரவையின் 27 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை பிரேரணையின் அமுலாக்கம் தொடர்பில் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் வாய்மூல அறிக்கையை சமர்ப்பிக்கவேண்டியது அவசியமாகும்.

செப்டெம்பர் மாதம் வாய்மூல அறிக்கை சமர்ப்பிக்கடவுள்ளமையினால் மே மாதமளவில் தேவையான நடவடிக்கைகளை மனித உரிமை பேரவை அலுவலகம் ஆரம்பிக்கும் என்று கூறப்படுகின்றது.

Tags: , ,

Leave a Reply