தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்விற்கு சர்வதேசத்தை நம்பியிருப்பதை விடவும் ஆட்சி மாற்றத்திற்கு துணை நிற்பதே சிறந்ததாகும். இனப்பிரச்சினைக்கான தீர்வு எம்மிடமே உள்ளது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
அரசாங்கம் நாட்டின் இனப்பிரச்சினையினை ஆயுதமாகப் பயன்படுத்துகின்றது. அதற்காகவே இனவாதத்தை தூண்டும் அமைப்புகளை அரசாங்கமே உருவாக்கியுள்ளது எனவும் அவர் குற்றம் சுமத்தினார்.
இலங்கையின் இனப்பிரச்சினைக்கு சர்வதேசத்தை நாடுவது பயனளிக்குமா என வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கருத்துத்தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் தற்போது இனவாதப் பிரிவினை தூண்டப்படுகின்றது. வடக்கில் தமிழர்கள் நிம்மதியில்லாத வாழ்க்கையினை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். கிழக்கில் முஸ்லிம்களும் தெற்கில் சிங்களவர்களும் இதேபோல் சிக்கலான வாழ்க்கையினையே வாழ்கின்றனர். இன்று யுத்தம் முடிவடைந்து ஐந்து ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு எந்தவொரு விடிவும் வரவில்லை.
விடுதலைப்புலிகள் உருவாகின்றனர் என்ற பெயரில் இன்னமும் வடக்கில் உள்ள தமிழ் மக்களை கட்டுப்படுத்தியே வைத்துள்ளனர். அத்துமீறிய இராணுவ பிரசன்னம், விசாரணைகள் என தமிழ் மக்களின் நிம்மதி சீரழிக்கப்பட்டுக்கொண்டு இருக்கின்றது.
தமிழர்களுக்கு இந்த அரசாங்கத்தினால் தீர்வு கிடைக்கவில்லையெனின் சர்வதேசத்தை நாடுவதில் தவறில்லை. அதேபோல் சர்வதேசத்தை நாடி தீர்வு காண்பதே இருக்கும் ஒரே வழியாகும். அதையே தற்போது தமிழ் அரசியல் கட்சித் தலைவர்கள் செய்து வருகின்றனர்.
ஆனால், சர்வதேசத்தை நாடும் அதே வேளை, இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த துணை நிற்பது தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண இலகுவான வழி முறையாக அமையும். இந்த அரசாங்கத்தை கவிழ்த்து மூவின மக்களையும் பிரதிபலிக்கும் பொதுவானதொரு கட்சி ஆட்சியமைக்குமாயின் எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வினைக் கண்டுவிடலாம். எனவே, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஏனைய சிங்கள, தமிழ், முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து இம்முறை ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டால் நாம் எமது பிரச்சினைகளை இங்கேயே தீர்த்துக்கொள்ள முடியும்.
அரசாங்கம் இன்று இனப்பிரச்சினையினையே ஆயுதமாகப் பயன்படுத்தி வருகின்றது. மூவின மக்களிடமும் இனவாதத்தினைப் பரப்பி முரண்பாடுகளுக்கு மத்தியில் இனவாத ஆட்சியினை நடாத்தி வருகின்றது. இதற்குக் காரணமாகவே மத வாதத்தைத் தூண்டும் வகையில் இனவாத மற்றும் மதவாத அமைப்புகளை அரசாங்கமே ஆரம்பித்து வைத்துள்ளது. சிறுபான்மை மக்களை அடக்கு முறைக்குள் உட்படுத்தி, அவர்களின் உரிமையினைப் பறித்து பேரினவாத சக்தியாக இருக்கவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ விரும்புகின்றார். இதன் விளைவே தற்போது வடக்கில் தமிழ் மக்கள் இராணுவ கட்டுப்பாட்டின் கீழும் ஏனைய பகுதிகளில் முஸ்லிம் மக்கள் ஒரு சில பௌத்த இனவாத அமைப்புகளுக்கு அஞ்சியும் செயற்பட வேண்டிய நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
சிங்கள மக்களும் தமது சுதந்திரத்தினையும் உரிமைகளையும் இழந்துவிட்டனர். தெற்கிலும் இராணுவ நடமாட்டம் அதிகரித்துவிட்டது. எனவே நாட்டில் விடுதலையினை ஏற்படுத்தி எதிர்கால மக்கள் சந்ததியினரையாவது காப்பாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. உயிர் என்பது தமிழர்களுக்கு வேறு சிங்கள, முஸ்லிம், கிறிஸ்தவ மக்களுக்கு வேறு என பிரிவில்லை. அனைத்து மக்களும் நிம்மதியுடன் வாழ வேண்டும். எனவே, அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து புதிய அரசாங்கத்தை உருவாக்க ஒன்றிணைய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
















