அம்பாந்தோட்டையில் ஐக்கிய தேசியக் கட்சி மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராக அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்காவிடின் சர்வதேச அளவில் பிரச்சினையினை கொண்டு செல்வதை தவிர்க்க முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ சபையின் தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.
நாட்டில் நீதித்துறை மீதான நம்பிக்கையை மக்கள் இழந்துவிட்டனர். இந்த அரசாங்கத்தினால் நீதித் துறையினை கட்டியெழுப்ப முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.
அம்பாந்தோட்டை சம்பவம் தொடர்பில் கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
அம்பாந்தோட்டையில் அரசாங்கத் தரப்பு குண்டர்களினால் தாக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் தொடர்பில் அரசாங்கம் இதுவரையில் எந்த சட்ட நடவடிக்கைகளும் எடுக்காதுள்ளது. அன்றைய தினம் சம்பவத்தின்போது தாக்குதலை மேற்கொண்ட அடியாட்கள் யார்? அவர்கள் கையில் வைத்திருந்த ஆயுதங்கள் எவை என்பன தொடர்பில் அனைத்து ஆதாரங்களும் உள்ளன. அனைத்து ஊடகங்களும் இதை வெளியிட்டது. இவ்வாறு இருக்கும் நிலையில் அரசாங்கம் குற்றவாளிகள் மீது எவ்வித நடவடிக்கைகளும் எடுக்காதிருப்பதற்கான காணரம் என்ன?
குறித்த காலத்திற்குள் இது தொடர்பில் அரசாங்கம் சட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இல்லையேல் இவ் விடயம் தொடர்பில் நாம் சர்வதேச அளவில் கொண்டு செல்வதையும் எவராலும் தடுக்க முடியாது. இலங்கையில் சட்ட, நீதிச்சேவைகள் இருப்பதன் காரணத்தினாலேயே நாம் இன்னமும் அரசாங்கத்தை வலியுறுத்தி நிற்கின்றோம். இச்சம்பவம் தொடர்பில் நியாயமான தீர்வுகளையே நாம் எதிர்பார்க்கின்றோம்.
















