பிறருக்கு சொந்தமான இலத்திரனியல் அட்டைகளை பயன்படுத்தி சட்ட விரோதமான முறையில் ஏ.ரீ.எம். நிலையங்கள் உள்ளிட்டவற்றில் கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்த பல சந்தேக நபர்கள் தொடர்பிலான தகவல்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸாருக்கு கிடைத்துள்ளன.
குற்றப் புலனாய்வுப் பிரிவில் நபர் ஒருவர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய அதனை விசாரணை செய்து வந்த பொலிஸாருக்கே இந்த சந்தேக நபர்கள் தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளன. இந் நிலையில் சந்தேக நபர்களை கைது செய்ய பொது மக்களின் உதவியை பொலிஸ் தலைமையகம் கோரியுள்ளது.
இவ்வாறு பிறருக்கு சொந்தமான இலத்திரனியல் அட்டைகளைப் பயன்படுத்தி கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டுவரும் நபர்களை அடையாளம் காணும் விதமாக பல்வெறு சீ.சீ.ரீ.வி.கமராக்களில் பதிவான காட்சிகளை புலனாய்வுப் பிரிவினர் பெற்றுள்ளதாக குறிப்பிட்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹன அந்த சந்தேக நபர்களை கைது செய்ய பொது மக்களின் ஒத்துழைப்பு அவசியம் என குறிப்பிட்டார்.
அத்துடன் அந்த சீ.சீ.ரீ.வி.பதிவுக்காட்சிகளை கேசரிக்கு வழங்கிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹனஇ படங்களில் உள்ள சந்தேக நபர்கள் தொடர்பிலான தகவல்கள் கிடைப்பின் அதனை 0112422176, 0112326670 அல்லது 0112320141 முதல் 145 வரையிலான தொலைபேசி இலக்கங்களுக்கோ 0112380380 என்ற தொலை நகல் இலக்கத்திற்கோ அறிவிக்குமாறு தெரிவித்தார்.
எவ்வாறாயினும் சந்தேக நபர்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் தொடர்ந்தும் அவதானம் செலுத்தியுள்ளனர்.
















