வடக்கு ஆளுநராக பொலிஸ் அதிகாரி ஏற்க மறுக்கிறது தமிழ்க் கூட்டமைப்பு; சந்திரசிறியின் மாற்றம் குறித்து சுரேஷ் எம்.பி.கருத்து

suresh-premachandran1பாதுகாப்புத் துறையுடன் தொடர்புபடாத ஒருவரே வடக்கு மாகாண சபையின் ஆளுநராக நியமிக்கப்பட வேண்டும் என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடாகும். இதனையே ஆரம்பம் முதல் நாம் வலியுறுத்தி வருகின்றோம் என்று தெரிவித்துள்ளார் அந்தக் கட்சியின் பேச்சாளரும், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன். தற்போது வடக்கு மாகாண ஆளுநராக முன்னாள் யாழ். மாவட்டத் தளபதியான மேஜர் ஜெனரல் சந்திரசிறி பதவி வகிக்கின்றார். அவரது பதவிக் காலம் அடுத்த மாதம் 30 ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது. அதன் பின்னர் அவருக்கு பதவி நீடிப்பு வழங்கப்படாது என்று வடக்கு மாகாண முதலமைச்சருக்கு ஜனாதிபதி உறுதியளித்துள்ள நிலையில், புதிதாக ஒருவர் அந்தப் பதவிக்கு நியமிக்கப்படவுள்ளார். இந்தநிலையில் வடக்கு மாகாணத்துக்கான புதிய ஆளுநராகப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அநுர சேனநாயக்கா நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன என்று வினவிய போதே சுரேஷ் பிரேமச்சந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,””பாதுகாப்புத் துறையைச் சேர்ந்தவர்கள் வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்படக் கூடாது என்பதை நாம் பல தடவைகள் வலியுறுத்தி கூறியிருக்கின்றோம். எமது தற்போதைய நிலைப்பாடும் அதுதான். பொலிஸ் துறை சிவில் நிர்வாகத்துடன் தொடர்புடைய ஒன்றுதான். ஆனால் நாம் கேட்பது பாதுகாப்புத் துறையுடன் தொடர்புபடாத சிவிலியன் ஒருவரே ஆளுநராக நியமிக்கப்பட வேண்டும் என்பதுதான்.

அதனை நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி முன்வர வேண்டும்’ என்று தெரிவித்தார். அரச தலைமைப் பீடத்துக்கு மிக நம்பிக்கையானவர் அநுர சேனநாயக்கா. இவர் அடுத்த பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அண்மையில் அவரது பிரதிப் பொலிஸ்மா அதிபர் பதவிக்காலம் முடிவுற்றிருந்த போதும், அது மேலும் ஆறு மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுமிருந்தது. அது அவரை அடுத்த பொலிஸ்மா அதிபராக நியமிக்கும் நோக்குடனேயே வழங்கப்பட்டது என்றும் பேசப்பட்டது. ஆயினும் அரசுத் தலைமை தற்போதைய பொலிஸ்மா அதிபரே அந்தப் பதவியில் தொடரட்டும்; அநுர சேனநாயக்காவை வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கலாம் என்றும் முடிவு செய் திருக்கின்றது என்று கூறப்படுகின்றது.

அநுர சேனநாயக்கா தென்னிலங்கை மக்கள் மத்தியில் மிகப் பிரபலமான பொப் இசைப் பாடகராவார். அத்துடன் இவர் மூத்த பொலிஸ் அதிகாரி என்பதால், இராணுவத்தினரும் இவர் மீது மரியாதை செலுத்துவர். எனவே இவரை வடக்கு மாகாண ஆளுநராக நியமிப்பதன் மூலம், சிவிலியன் ஒருவர் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று வடக்கு மாகாண சபையையும், சர்வதேச சமூகத்தையும் திருப்திப்படுத்தலாம் என்ற எண்ணத்துடனேயே அரசுத் தலைமை இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது என்று நம்பகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags: , ,

Leave a Reply